செங்கல்பட்டு அருகே இன்று அதிகாலை அடுத்தடுத்து 3 லாரிகள் மோதி தீப்பிடித்ததில் ஒருவர் பலி: 4 பேர் படுகாயம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே சிங்கப்பெருமாள்கோவில், ஜிஎஸ்டி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் கார் உதிரிபாகங்கள் ஏற்றி சென்ற கன்டெய்னர் லாரி, ஒரகடம் பகுதிக்கு செல்வதற்காக திரும்பியுள்ளது. அப்போது, அதன் பின்னால் சிமென்ட் கான்கிரீட் கலவை ஏற்றி வந்த லாரி, அதன் பின்னே வந்த மற்றொரு டாரஸ் லாரி என அடுத்தடுத்து ஒன்றன் பின் ஒன்றாக 3 லாரிகளும் தொடர்ச்சியாக மோதிக் கொண்டன. இதில் 3 லாரிகளிலும் டீசல் டேங்க் வெடித்து சிதறியதில் கொழுந்துவிட்டு எரியத் துவங்கியது. இவ்விபத்தில் 2 லாரிகளுக்கு நடுவே சிக்கியிருந்த சிமென்ட் கான்கிரீட் கலவை ஏற்றி வந்த லாரி முழுமையாக தீப்பிடித்து எரிந்து நாசமானது. இதனால் அப்பகுதியில் கரும் புகைமண்டலம் எழும்பியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது.

இவ்விபத்தில், தீப்பிடித்து முழுமையாக எரிந்த சிமென்ட் கான்கிரீட் கலவை லாரி ஓட்டிவந்த பாண்டிச்சேரி, மதகடிப்பட்டு கிராமத்தை சேர்ந்த டிரைவர் சந்திரசேகர் (37) என்பவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவலறிந்ததும் மறைமலைநகர், மகேந்திரா சிட்டியை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் வாகனங்களுடன் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் போராடி, 3 லாரிகளில் பரவியிருந்த தீயை முற்றிலும் அணைத்தனர். சிமென்ட் கான்கிரீட் கலவை ஏற்றி வந்த லாரி முழுமையாக எரிந்து சேதம

டைந்தது. பின்னர் விபத்தில் சிக்கிய 3 லாரிகளில் படுகாயம் அடைந்த சிவராஜ், முத்துப்பாண்டி, கோட்டைராஜ், ஏழுமலை ஆகிய 4 பேரை மறைமலைநகர் போலீசார் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், விபத்தில் பலியான டிரைவர் சந்திரசேகரின் சடலத்தை, அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரிக்கின்றனர். அங்கு விபத்தில் சிக்கிய 3 லாரிகளையும் கிரேன் உதவியுடன் போலீசார் அகற்றி, வாகன போக்குவரத்தை சீரமைத்தனர்.

The post செங்கல்பட்டு அருகே இன்று அதிகாலை அடுத்தடுத்து 3 லாரிகள் மோதி தீப்பிடித்ததில் ஒருவர் பலி: 4 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: