அம்ரித் பாரத் திட்டத்தில் ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும் : சிவகாசி மக்கள் கோரிக்கை

சிவகாசி : ஒன்றிய அரசின் அமிரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தில் சிவகாசி ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணியை விரைவில் துவங்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒன்றிய அரசின் சார்பில் அதிக வருவாய் மற்றும் நகரங்களின் பாரம்பரிய சிறப்பின் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள 1000 சிறிய ரயில் நிலையங்களில் புதிய நவீன வசதிகளை நீண்ட கால சிறப்பு திட்டத்தின் அடிப்படையில் மேம்படுத்துவதற்காக கடந்த டிசம்பர் மாதம் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த சிறப்பு திட்டத்தின் கீழ் ஒரு ரயில்வே மண்டலத்தில் உள்ள பல்வேறு நகரங்களை இணைக்கும் மையமாக உள்ள முக்கிய ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த ரயில் நிலையங்களில் மேற்கொள்ள வேண்டிய கட்டமைப்பு வசதிகள் குறித்த திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்களில் குறைந்தபட்ச அடிப்படை தேவைகளை ஏற்படுத்துதல், எக்ஸ்குலேட்டர் வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி, ஒரு நிலையம் ஒரு பொருள் திட்டம், ரயில் நிலையத்தின் வடிவமைப்பு, 5 ஜி சேவை, நடைமேடைகளை மேம்படுத்துதல் மற்றும் ஏற்கனவே உள்ள வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் நீண்டகால தேவையின் அடிப்படையில் புதிய நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்தில் மதுரை மண்டலத்தில் உள்ள விருதுநகர், சிவகாசி, திருவில்லிபுத்தூர், ராஜபாளையம், தென்காசி, புனலூர், கோவில்பட்டி, பழநி, ராமநாதபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை, பரமக்குடி, அம்பாசமுத்திரம், திருச்செந்தூர், மணப்பாறை, சோழவந்தான் ஆகிய ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் குட்டி ஜப்பான் என புகழப்படும் சிவகாசி ரயில் நிலையம் முதலில் தேர்வு செய்யப்படவில்லை.

இதனால் ரயில் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் புதிய அறிவிப்பில் சிவகாசி ரயில் நிலையம் இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டது. சிவகாசி நகரில் பட்டாசு, தீப்பெட்டி, அச்சு தொழில் நடைபெற்று வருகிறது. வெளிமாநிலம், மற்றும் வெளிநாடுகளில் இருந்து வியாபாரிகள் இந்த நகருக்கு வந்து செல்கின்றனர். எனவே சிவகாசி ரயில் நிலையத்திற்கு முன்னுரிமை அளித்து அம்ரித் பாரத் திட்டத்தில் ரயில்நிலையம் மேம்படுத்தும் பணியை உடனே துவங்கிட பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அம்ரித் பாரத் திட்டத்தில் ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும் : சிவகாசி மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: