ஜேஇஇ நுழைவுத் தேர்வு கழிப்பறைக்கு சென்று திரும்பும் போதும் பயோமெட்ரிக் கட்டாயம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

புதுடெல்லி: பொறியியல் நுழைவுத் தேர்வு எழுதுபவர்களுக்கு கழிப்பறை இடைவேளைக்கு பிறகும் பயோமெட்ரிக் வருகை பதிவு கட்டாயமாக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு ஜேஇஇ எனப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. ஜனவரி 24ம் தேதி முதல் பிப்ரவரி 1ம் தேதி வரை நடைபெறும் தேர்வு முடிவுகள் பிப்ரவரி 12ம் தேதி வௌியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஜேஇஇ தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக தொடர் புகார்கள் வருகின்றன. இந்நிலையில் ஜேஇஇ மாணவர்களுக்கு கழிப்பறை இடைவேளைக்கு பிறகும் பயோமெட்ரிக் வருகை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேசிய தேர்வு முகமை இயக்குநர் சுபோத் குமார் சிங் வௌியிட்டுள்ள அறிவிப்பில், “ஜேஇஇ மாணவர்களுக்கு ஏற்கனவே நிறைய விதிமுறைகள் உள்ளன. ஆனால் எவ்வித முறைகேடுகளும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் கழிப்பறை இடைவேளைக்கு சென்று வந்த பிறகும் முழுவதும் சோதனை செய்யப்பட வேண்டும். அவர்கள் மீண்டும் பயோமெட்ரிக் வருகை பதிவையும் செய்ய வேண்டும். தேர்வு அறையில் உள்ள அதிகாரிகள், பணியாளர்கள், பார்வையாளர்கள் மற்றும் சிற்றுண்டி தர வரும் உதவியாளர்கள் அனைவருக்கும் இந்த நடைமுறை கடைப்பிடிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஜேஇஇ நுழைவுத் தேர்வு கழிப்பறைக்கு சென்று திரும்பும் போதும் பயோமெட்ரிக் கட்டாயம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: