இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே இரண்டு முறை தாக்கல் செய்த மனுக்களையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, ஜாமீன் கோரிய செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்த நிலையில் உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்த நிலையில் கீழமை நீதிமன்றத்தை நாடலாம் எனவும் அந்த மனு மீது தகுதியின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், செந்தில் பாலாஜி சார்பில் ஜாமீன் கோரி 3வது முறையாக முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த வழக்கில் ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்த போது, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த மனு குறித்து பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டுமென கோரினார். இதனையடுத்து, அமலாக்கத்துறை பதிலளிக்க அவகாசம் அளித்த நீதிபதி விசாரணையை வரும் 8ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
The post அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மனு அமலாக்கத்துறை பதில் தர அமர்வு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.