வரத்து குறைந்ததையடுத்து பூண்டி நீர் தேக்கத்தில் உபரிநீர் திறப்பு நிறுத்தம்

திருவள்ளூர், ஜன. 3: வரத்து குறைந்ததையடுத்து பூண்டி சத்தியமூர்த்தி நீர் தேக்கத்திலிருந்து திறக்கப்படும் உபரிநீர் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருப்பது பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கமாகும். இதன் முக்கிய நீர் ஆதாரமாக இருப்பது கண்டலேறு அணையில் இருந்து வரும் கிருஷ்ணா நீர் மற்றும் மழை நீர் ஆகும். இந்நிலையில் பருவமழை மற்றும் கிருஷ்ணா நீர்வரத்து அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது. மேலும் பூண்டி நீர்த்தேக்கத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தேங்கும் மழைநீரை கால்வாய் மூலம் பெறுவதற்காக அமைக்கப்பட்ட வரத்துக்கால்வாய்கள் சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்ததால் அணையில் இருந்து 40 ஆயிரம் கன அடி வரை உபரி நீர் மதகுகள் வழியே வெளியேற்றப்பட்டு வந்தது.

பூண்டி ஏரியின் மொத்தக் கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில் தற்போது 3,064 மி்ல்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு வினாடிக்கு 40 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. நீர்மட்டம் 34.73 அடியாக உள்ளது. மழை நின்று போனதாலும், ஆந்திர மாநிலம் அம்மம்பள்ளி அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட நீர் நிறுத்தப்பட்டதாலும் நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால் நீர்த்தேக்கத்திலிருந்து திறக்கப்படும் உபரி நீரானது நிறுத்தப்பட்டது. மேலும் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக பேபி கால்வாய் மூலம் 13 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதேபோல் சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1,081 மில்லியன் கன அடியில் தற்போது இருப்பு 777 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து 16 கன அடியாகவும், வெளியேற்றம் 16 கன அடியாகவும் உள்ளது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,300 மில்லியன் கன அடியில் தற்போது இருப்பு 2,952 மில்லியன் கன அடியும், வரத்து 46 கன அடியாகவும், வெளியேற்றம் 189 கன அடியாகவும் உள்ளது. கண்ணன்கோட்டை ஏரியின் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில் தற்போது இருப்பு 500 மில்லியன் கன அடியும், நீர் வரத்து 10 கன அடியும், வெளியேற்றம் 10 கன அடியும் உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கன அடியில் தற்போது இருப்பு 3,135 மில்லியன் கன அடியும், நீர் வரத்து 32 கன அடியும், வெளியேற்றம் 126 கன அடியும் உள்ளது. பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு வரும் நீர்வரத்து குறைந்ததால் கொசஸ்தலை ஆற்றில் உபரி நீர் திறப்பு நிறுத்தப்பட்டதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post வரத்து குறைந்ததையடுத்து பூண்டி நீர் தேக்கத்தில் உபரிநீர் திறப்பு நிறுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: