கோவை – பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை அயோத்தியில் நடந்த விழாவில் கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி..!!

லக்னோ: கோவை – பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி அயோத்தியில் நடந்த விழாவில் கொடியசைத்து துவக்கி வைத்தார். அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22ம் தேதி நடக்கிறது. இதனையடுத்து பக்தர்களின் வசதிக்காக ரூ.240 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மறுசீரமைக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்து பார்வையிட்டார். 3 மாடிகள் கொண்ட நவீன ரயில் நிலையம் – மின் தூக்கிகள், நகரும் படிகள், வணிக கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

“அமிர்த பாரத்” என்ற அதிவிரைவு பயணிகள் ரயில்களை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதேபோல் 6 புதிய வந்தே பாரத் ரயில்களையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழாவில் ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கோவை – பெங்களூருவுக்கு புதிய வந்தே பாரத் ரயில் இயக்கம்:

கோவை – பெங்களூரு கண்டோண்மென்ட் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தொடங்கப்பட்டுள்ளது. அயோத்தியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் புதிதாக வந்தே பாரத் ரயில்களை துவங்கி வைத்தார். தமிழகத்துக்கு மேலும் ஒரு வந்தே பாரத் ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கோவையில் இருந்து பெங்களூருவுக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஓமலூர், தர்மபுரி, ஓசூர் ஆகிய 3 இடங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை காலை 5 மணிக்கு கோவையில் புறப்பட்டு காலை 11.30 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தை சென்றடையும்.

மறுமார்க்கமாக பிற்பகல் 1:40 மணிக்கு பெங்களூருவில் இருந்து கிளம்பி இரவு 8 மணிக்கு கோவையை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை – கோவை, சென்னை – மைசூர், சென்னை – திருநெல்வேலி வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வந்தது. தற்போது புதிதாக சென்னை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி துவங்கி வைத்துள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டிற்கு இது நான்காவது வந்தே பாரத் ரயிலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post கோவை – பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை அயோத்தியில் நடந்த விழாவில் கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி..!! appeared first on Dinakaran.

Related Stories: