குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்த நிலையில் 3 குற்றவியல் சட்டங்களும் அரசிதழில் வெளியீடு: சட்டம் அமலுக்கு வர ஓராண்டாகும்


புதுடெல்லி: ஒன்றிய அரசு கொண்டு வந்த 3 குற்றவியல் சட்டங்களுக்கும் குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்த நிலையில், தற்போது இச்சட்டம் ஒன்றிய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் இயற்றப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம்-1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம்-1898, இந்திய சாட்சிய சட்டம்-1872 ஆகியவற்றுக்கு மாற்றாக ‘பாரதிய நியாய சம்ஹிதா’, ‘பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா’, ‘பாரதிய சாட்சிய அதினியம்’ ஆகிய 3 சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்திய குற்றவியல் நீதி அமைப்பில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்துவதை இந்தச் சட்டங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன. நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இந்த மசோதாக்கள் திரும்பப் பெறப்பட்டு, திருத்தங்களுடன் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மசோதாக்களுக்கு மக்களவை கடந்த டிச. 20ம் தேதியும் மாநிலங்களவை கடந்த டிச. 21ம் தேதியும் ஒப்புதல் அளித்தன.

தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மேற்கண்ட 3 மசோதாக்களுக்கும் கடந்த சில தினங்களுக்கு முன் ஒப்புதல் அளித்தார். அதையடுத்து மூன்று குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளது. ஒன்றிய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இச்சட்டத்தை காவல் நிலையங்களிலும் நீதிமன்றங்களிலும் நடைமுறைப்படுத்துவதில் குழப்பம் நிலவுகிறது. ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியாகினாலும் கூட, ஒன்றிய அரசு குறிப்பிடும் தேதியில் இருந்து தான் புதிய சட்டம் நடைமுறைக்கு வரும் என்றும் அந்த அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சண்டிகரில் நடந்த நிகழ்ச்சியில், ‘அனைத்து மாநிலம், யூனியன் பிரதேசங்களிலும் மூன்று குற்றவியல் சட்டங்களும் அமல்படுத்துவதற்கான கட்டமைப்பு வசதிகள் அடுத்தாண்டு டிசம்பருக்குள் தயாராகிவிடும்’ என்று கூறியிருந்தார்.

இதுதொடர்பாக அனைத்து யூனியன் பிரதேசங்களுக்கும் வரும் ஜனவரி 31ம் தேதிக்குள் கூட்டம் நடத்தப்பட்டு, மூன்று சட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனைகள் வழங்கப்படும் என்றும், அனைத்து மாநிலங்களிலும் அடுத்தாண்டு டிசம்பர் 22ம் தேதிக்குள் முழுமையாக பயிற்சிகள் வழங்கப்பட்டுவிடும் என்றும் கூறப்படுகிறது. எனனே அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், மேற்கண்ட மூன்று சட்டத்தையும் ஒரே நேரத்தில் அமல்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை மூத்த அதிகாரி தெரிவித்தார்.

The post குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்த நிலையில் 3 குற்றவியல் சட்டங்களும் அரசிதழில் வெளியீடு: சட்டம் அமலுக்கு வர ஓராண்டாகும் appeared first on Dinakaran.

Related Stories: