சம்பள உயர்வு வழங்க கோரி அங்கன்வாடி ஊழியர்கள் மண்டியிட்டு போராட்டம்

திருப்பதி : திருப்பதி அருகே அங்கன்வாடி ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி மண்டியிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருப்பதி அடுத்த சந்திரகிரி மண்டல வருவாய் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மண்டியிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஜெயச்சந்திரா பேசியதாவது:

ஆந்திர மாநிலத்தில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளமாக ₹26 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கடந்த 2 வாரங்களாக மாநிலம் முழுவதும் அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் அரசு இதுவரை எந்த பேச்சு வார்த்தையும் நடத்த முன்வரவில்லை. ஊழியர்களின் போராட்டத்தை அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது. மேலும் அங்கன்வாடி மையங்களில் பஞ்சாயத்து ஊழியர்களை கொண்டு பணிகளை மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

முதல்வர் ஏற்கனவே அளித்த வாக்குறுதியின் படி சம்பள உயர்வு கோரி வருகிறோம். தற்போதைய காலக்கட்டத்தில் அனைத்து அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்து வருவதால், சம்பள உயர்வு அவசியம். இதனை உடனடியாக அறிவிக்க வலியுறுத்தி, மண்டியிட்டு நூதன போராட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். உடனடியாக அரசு பேச்சு வார்த்தைக்கு அழைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.இதில் சிஐடியு நகர செயலாளர் லட்சுமி, விஜயகுமாரி, நாகபூஷணம் அம்மா, லீலா, நாகராஜம்மா, பத்மினி சுஜாதா, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post சம்பள உயர்வு வழங்க கோரி அங்கன்வாடி ஊழியர்கள் மண்டியிட்டு போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: