ஆரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும்: கலெக்டரிடம் ஊராட்சி தலைவர் மனு

திருவள்ளூர்: ஆரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க வேண்டும் என மாம்பாக்கம் ஊராட்சி தலைவர் கலெக்டரிடம் மனு அளித்துள்ளார். அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மாம்பாக்கம் கிராமத்தில் ஆரணியாறு ஆற்றின் குறுக்கே ரூ.8 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டிக் கொடுக்கப்படும் என 2020-21ம் நிதி ஆண்டில் அன்றைய முதலமைச்சரால் சட்டப்பேரவை கூட்டத்தில் பொதுப்பணித்துறை மானிய கோரிக்கையில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டது. ஆனால், 3 ஆண்டுகள் ஆகியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், கடந்த ஆட்சியின் போது மணல் குவாரி அமைக்கப்பட்டு ஆற்றின் அடி மட்டம் வரை மணல் எடுத்ததால் தற்போது ஆறு முழுவதும் களிமண்ணாக உள்ளது. இதனால் ஆற்றில் நீர் தேங்கி நிற்க வாய்ப்பில்லை. எனவே மாம்பாக்கம் கிராம பகுதியில் ஆரணியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டிக் கொடுத்தால் மழைநீர் வீணாக கடலில் செல்வதை தடுத்து நிறுத்துவதோடு மட்டுமல்லாமல் நிலத்தடி நீரும் உயரும். மாம்பாக்கம் கிராமத்தை சுற்றியுள்ள 15 கிராமங்களின் குடிநீருக்கு மட்டுமின்றி, விவசாயமும் செழித்து நிற்கும். இதுகுறித்து கடந்த 24.2.23ல் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது. எனவே நடப்பு 2023-24ம் நிதியாண்டில் நிதி ஒதுக்கீடு செய்து தடுப்பணை கட்டித்தர நடவடிக்கை எடுக்கவேண்டும்.

The post ஆரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும்: கலெக்டரிடம் ஊராட்சி தலைவர் மனு appeared first on Dinakaran.

Related Stories: