‘இந்தியா’ கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை; லோக்சபா தேர்தலில் காங். எத்தனை தொகுதியில் போட்டியிடும்?.. கடந்தகால அனுபவங்களின் அடிப்படையில் தலைவர்கள் ஆலோசனை


டெல்லி: ‘இந்தியா’ கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கிய நிலையில் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் எத்தனை தொகுதியில் போட்டியிடும்? என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த கால அனுபங்களின் அடிப்படையில் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளதால் ஆளும் பாஜக அரசை வீழ்த்துவதற்காக உருவான ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் எதிர்கட்சிகள் கடந்த சில நாட்களுக்கு முன் ெடல்லியில் கூடி ஆலோசனை நடத்தின. அப்போது மாநிலம் வாரியாக தொகுதி பங்கீடு குறித்து சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. கேரளா, மேற்குவங்கம், டெல்லி, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் காங்கிரசுக்கும், இடதுசாரிகளுக்கும், ஆம்ஆத்மிக்கும் தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி அமைத்தல் முரண்பாடுகள் இருப்பதால், அந்த மாநிலங்களின் நிலவரம் குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது.

பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு செய்து கொள்வது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் மாநில கட்சிகளுக்கு செல்வாக்கு இருப்பதால், அந்த கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் கூட்டணி அமைக்க வேண்டி உள்ளது. காங்கிரசுக்கு செல்வாக்கு உள்ள மாநிலங்களில் கூட்டணி கட்சிகளுக்கு சீட் பகிர்வை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது. இந்த வார இறுதியில் காங்கிரஸ் நிறுவன தினத்தையொட்டி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் மிகப்பெரிய பேரணி நடக்கவுள்ளது. ஆனால் லோக்சபா தேர்தல் பிரசாரம் தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுப்பதில் கட்சிக்குள் விவாதம் நடந்து வருகிறது. இந்தக் கேள்விகளில் மிக முக்கியமானது, ராகுல் காந்தியின் இரண்டாவது சுற்று பாரத் ஜோடோ யாத்ரா மற்றும் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு ‘சூத்திரம்’ தொடர்பானது.

குறிப்பாக ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதி பங்கீடு எப்படி நடத்துவது என்பதுதான் தற்போது காங்கிரஸுக்குள் இருக்கும் மிகப்பெரிய கவலையாகக் கருதப்படுகிறது. இருப்பினும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சிக்குள் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டது. உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். சமீபத்தில் நடந்த காங்கிரஸ் செயற்கு குழு கூட்டத்தில் வருகிற லோக்சபா தேர்தலில், குறைந்த தொகுதிகளில் போட்டியிட்டாலும், அந்த ெதாகுதிகளில் வெற்றி பெறவேண்டும் என்று பல தலைவர்கள் எடுத்து கூறியுள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் 421 இடங்களில் காங்கிரஸ் போட்டியிட்டு 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

300க்கும் குறைவான இடங்களில் போட்டியிட்டால், அது கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் மூத்த தலைவர்கள் கூறியுள்ளனர். அதற்கு உதாரணம் கடந்த 1996ல் உத்தரபிரதேசத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 425 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்து அக்கட்சிக்கு 296 இடங்களை கொடுத்துவிட்டு, 126 இடங்களில் காங்கிரஸ் போட்டியிட்டு 33 இடங்களை கைப்பற்றியது. அதன்பின் உத்தரபிரதேசத்தில் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் பேரவை தேர்தலில் காங்கிரஸ் தோற்றதால், லோக்சபா தேர்தலை கூட்டணி கட்சிகளுடன் இணைந்து எதிர்கொள்வதில் காங்கிரஸ் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது

ரேபரேலி என்னாகும்?
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி, அமேதி தொகுதிகள் காங்கிரசின் கோட்டையாக உள்ளது. ஆனால் 2019 தேர்தலில் அமேதி தொகுதியில் போட்டியிட்ட ராகுல்காந்தி, ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தார். அதேநேரம் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, 1,67,178 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பாஜகவின் தினேஷ் பிரதாப் சிங்கை தோற்கடித்தார். ஆனால், அடுத்தாண்டு நடக்கும் லோக்சபா தேர்தலில் ரேபரேலியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுமா? என்பது குறித்து ‘ஏபிபி நியூஸ் மற்றும் சி – வோட்டர்’ சர்வே நடத்தியது. அதில், கடந்த முறை சோனியாவை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக மூத்த தலைவரும், உத்தரப் பிரதேச அமைச்சருமான தினேஷ் பிரதாப் சிங், இம்முறை அவர் போட்டியிட்டால் அதிக வாக்குகளை பெறுவார் என்று கணித்துள்ளது.

The post ‘இந்தியா’ கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை; லோக்சபா தேர்தலில் காங். எத்தனை தொகுதியில் போட்டியிடும்?.. கடந்தகால அனுபவங்களின் அடிப்படையில் தலைவர்கள் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: