மாரியம்மன் கோயில் பொங்கல் விழா பெண்கள் தீர்த்தக்குடம் எடுத்து நேர்த்திக்கடன்

 

ஈரோடு, டிச.25: ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் பொங்கல் திருவிழா கடந்த 19ம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தெப்பக்குளத்தில் இருந்து, கம்பம் எடுத்து வந்து கோயிலில் அம்மன் முன்பாக நடப்பட்டது. பெண்கள் தினமும் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி அம்மனை வழிபட்டு வருகின்றனர். விழாவையொட்டி அம்மனுக்கு தினம் சிறப்பு அலங்கார, அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி, பெண்கள் மற்றும் பக்தர்கள் நேற்று காலையில் கலைவாணர் வீதியில் இருந்து புறப்பட்டு காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீர் எடுத்து, தீர்த்தக்குடம் எடுத்து கொண்டு ஊர்வலமாக வந்தனர். அப்போது, முளைப்பாரி, அக்னிச்சட்டி, பால்குடம் ஏந்தியும் பலர் உடலில் அலகு குத்தியும் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.

தொடர்ந்து, நாளை (26ம் தேதி) மாலை 4 மணிக்கு பக்தர்கள் கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சியும், நாளை மறுநாள் (27ம் தேதி), முக்கிய நிகழ்வான பொங்கல் விழா, மாவிளக்கு பூஜையும் நடைபெறும். தொடர்ந்து, 28ம் தேதி காலை 7 மணிக்கு கம்பம் பிடுங்கப்பட்டு, வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்து மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும். மாலையில் மலர் பல்லக்கில் அம்மன் வீதி உலா நடைபெறும். தொடர்ந்து, 29ம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.

The post மாரியம்மன் கோயில் பொங்கல் விழா பெண்கள் தீர்த்தக்குடம் எடுத்து நேர்த்திக்கடன் appeared first on Dinakaran.

Related Stories: