கொங்கலம்மன் கோயில் வீதியில் புகையிலை பொருள் விற்பனையை தடுக்க கடைகளில் தீவிர சோதனை

ஈரோடு, மே 23: ஈரோடு, கொங்கலம்மன் கோயில் வீதியில் கடைகளில் தடை அமலாக்க பிரிவு போலீசார் நேற்று காலையில் சோதனை நடத்தினர். அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்கள் விற்பனையை தடுக்க தமிழ்நாடு போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலும் தடை அமலாக்கப் பிரிவு போலீசார் தொடர் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, கடந்த 14ம் தேதி மேற்கொள்ளப்பட்ட சோதனையில், ஈரோட்டில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்களை போலீசார் பறிமுதல் செய்திருந்தனர்.

இந்நிலையில், ஈரோடு கொங்கலம்மன் கோயில் வீதி, புது மஜித் வீதி பகுதிகளில் ஒரு சில மொத்த விற்பனை கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களான பான் மசாலா, குட்கா விற்பனை செய்யப்படுவதாகவும், ஈரோடு மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மளிகை கடை வியாபாரிகள், காலை நேரங்களில் இப்பகுதியில் உள்ள மொத்த விற்பனை கடைகளுக்கு வந்து மளிகை கடைகளுக்கு தேவையான பொருள்களை வாங்கும்போது, புகையிலை பொருள்களையும் வாங்கிச் செல்வதாகவும், போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று காலையில், 50க்கும் மேற்பட்ட மளிகை உள்ளிட்ட மொத்த விற்பனை கடைகளிலும் அவர்களுக்கு சொந்தமான வீடு, குடோன்களிலும் சுமார் 30க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் எந்தவிதமான தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களும் கைப்பற்றப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

The post கொங்கலம்மன் கோயில் வீதியில் புகையிலை பொருள் விற்பனையை தடுக்க கடைகளில் தீவிர சோதனை appeared first on Dinakaran.

Related Stories: