“சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம் அடுத்த மாதம் இலக்கை அடையும்”: இஸ்ரோ தலைவர் சோம்நாத் உறுதி

ஸ்ரீஹரிகோட்டா: ஆதித்யா எல்-1 விண்கலம் அடுத்த மாதம் இலக்கை அடையும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.சி-57 ராக்கெட் மூலம் சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா-எல் 1 என்ற விண்கலம், கடந்த செப்டம்பர் மாதம் 2-ந்தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஆதித்யா எல்1 விண்கலம் பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் ‘லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்’ எனும் இடத்தில், சூரியனை பார்த்தவாறு நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது.

இந்த புள்ளியில் விண்கலம் இருப்பதால் சூரியனின் செயல்பாடுகளை எந்த தடையின்றி கவனிக்கவும், சூரிய கதிர்வீச்சுகளை அணுக உதவுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இது தற்போது சூரியனை புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறது. இந்திய விஞ்ஞானிகள் சூரியனை தொலை நோக்கி மூலமாகதான் இதற்கு முன்னர் புகைப்படமாக எடுத்திருக்கிறார்கள். நம் வசம் இருக்கும் சூரியன் குறித்த புகைப்படங்கள் அனைத்தும் மற்ற நாடுகளின் ஸ்பேஸ் ஏஜென்சிகள் மூலம் கிடைத்தவை. ஆனால் தற்போது முதல் முறையாக சூரியனை நெருக்கத்தில் வைத்து இந்திய விஞ்ஞானிகள் தெளிவான புகைப்படம் எடுத்திருக்கிறார்கள்.

இந்திய விண்வெளி வரலாற்றில் இது அரிய தருணம். இந்நிலையில், ஆதித்யா எல்-1 எப்போது அதன் நிலை புள்ளியை சென்று சேரும் என்று கேள்விகள் எழுந்தன. இதற்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கமளித்துள்ளார். அதாவது, சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம் ஜனவரி 6ம் தேதி அதன் இலக்கான லெக்ராஞ்சியன் நிலைப்புள்ளியை சென்றடையும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

லெக்ராஞ்சியன் நிலைப்புள்ளியை அடைந்தவுடன் அந்த இடத்திலேயே சுற்றிவந்து சூரியனில் ஏற்படும் நிகழ்வுகளை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆய்வு மேற்கொண்டு தகவல்களை பூமிக்கு அனுப்பும். இந்த தரவுகள் சூரியனின் இயக்கம் மற்றும் அது நம் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். ஆதித்யா எல்1 திட்டத்தின் நோக்கம் விரைவில் வெற்றி பெரும் எனவும், ஆதித்யா திட்டம் இறுதிக் கட்டத்தை நெருங்குகிறது என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

The post “சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம் அடுத்த மாதம் இலக்கை அடையும்”: இஸ்ரோ தலைவர் சோம்நாத் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: