மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் போக்குவரத்து நாளை(டிச.22) வரை ரத்து: சேலம் கோட்ட ரயில்வே அறிவிப்பு

சேலம்: மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் போக்குவரத்து நாளை(டிச.22) வரை ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே அறிவித்துள்ளது. மழையால் ஹில்குரோவ் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் மண் மற்றும் பாறைகள் சரிந்துள்ளதால் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

ஊட்டி மலை ரயில் மேட்டுப்பாளையத்திலிருந்து 184 பயணிகளுடன் நேற்று(டிச.20) காலை புறப்பட்டது. கல்லாறு ரயில் நிலையம் அருகே சென்றபோது கல்லாறு – ஹில்குரோவ் இடையே மண் சரிவு ஏற்பட்டு தண்டவாளம் சேதமடைந்ததாக ரயில்வே நிர்வாகத்திற்கு தகவல் கிடத்தது. இதையடுத்து கல்லாறு நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது.

பின்னர் மலை ரயில் மீண்டும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் கொண்டு வரப்பட்டது. மண் சரிவை சீர் செய்த பின்னரே மலை ரயில் இயக்கப்படும் என்பதால் நேற்று ஒரு நாள் மட்டும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. இதனால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றமடைந்தனர். இதனையடுத்து மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் வந்த சுற்றுலா பயணிகள், அங்கிருந்து சுற்றுலா வாகனங்கள் மற்றும் பேருந்துகள் மூலம் ஊட்டி புறப்பட்டு சென்றனர்.

இந்நிலையில் ஹில்குரோவ் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் மண் மற்றும் பாறைகள் சரிந்துள்ளதால் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ரயில் போக்குவரத்து நாளை(டிச.22) வரை ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே அறிவித்துள்ளது.

ஏற்கனவே தொடர் கன மழை, மண் சரிவு, தண்டவாள அரிப்பு, வானிலை மையத்தின் கனமழை எச்சரிக்கை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 22 நாட்களுக்கு பிறகு கடந்த 14ம் தேதி முதல் மலை ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மலை ரயில் சேவை மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

The post மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் போக்குவரத்து நாளை(டிச.22) வரை ரத்து: சேலம் கோட்ட ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: