என்ன சொல்லுது உங்கள் ராசி?: மூளையை மூலதனமாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்கள்

என்ன சொல்லுது உங்கள் ராசி?

முனைவர் செ.ராஜேஸ்வரி

ரிஷப ராசிக்காரர்கள் சொகுசு பேர்வழிகள். வெயில் படாமல் வேர்வை சிந்தாமல் உட்கார்ந்த இடத்தில் தங்களுடைய மூளையின் பலத்தைக் கொண்டு வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பார்கள். பணம், காசு, சொத்து, சுகம் ஆகியவற்றில் கருத்துள்ளவர்களாக இருப்பார்கள். இலவசமாக ஒரு துரும்பைகூட கிள்ளி போட மாட்டார்கள்.

தன் நலம்

ரிஷப ராசியினர் சுயநலம் உடையவர்கள். கௌரவம் பிரஸ்டீஜ் பார்ப்பார்கள். ஆனால், நம்பகமானவர்கள். தனது குடும்பத்தின் மீதும் குழந்தைகளின் மீதும் நண்பர்கள் சுற்றத்தினர் மீதும் பாசமும் பரிவும் கொண்டவர்கள். ரிஷப ராசி, ராசி மண்டலத்தின் இரண்டாவது ராசியாக இருப்பதாலும், சுக்கிரன் ராசியின் அதிபதியாக இருப்பதாலும், 2-ஆம் இடம் தனஸ்தானமாக இருப்பதால், வருமானம் என்பது இவர்களுக்கு பிரதானம்.

காதல்

சுக்கிரன் அசுர குரு மற்றும் வீனஸ் காதல் தேவதை என்பதால் இவர்களில் காதலில் நிபுணர்கள். இவர்களுக்கும் படபடப்பாக எதையும் செய்யவோ பேசவோ மாட்டார்கள். மேஷ ராசிக்கு நேர் எதிரானவர்கள் ரிஷபராசியினர். காதலில் இவர்கள் எடுத்த எடுப்பில் தடால் என்று குதித்துவிட மாட்டார்கள். நிதானமாக படிப்படியாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்து முன்னேறுவார்கள்.

பழமையே பெருமை

ரிஷப ராசி பூமிராசி. அதாவது, நிலையான ராசி என்பதால் இவர்களிடம் பெரும்பாலும் மாற்றங்களுக்கும் புதுமைகளுக்கும் பெரிய வரவேற்பு இருக்காது. பூர்வீகச் சொத்து, பாரம்பரிய வீடு, தாத்தா காலத்து கடிகாரம் ஆகியவற்றில் அதீத விருப்பம் உண்டு. சொந்த ஊர்ப் பாசம் நிறைய உண்டு. குலதெய்வக் கோயிலுக்கு அடிக்கடி போவார்கள். ஊர் மணியக்காரர் அல்லது தன் சாதித் தலைவராக பெரும்பாலும் இருப்பார்கள். தாய் மொழிப்பற்று, தாய் நாட்டுப் பற்று மிகுதி. சுற்றத்தினரோடு சூழ இருந்து கொண்டாட்டங்களையும் கோயில் வழிபாடுகளையும் நடத்துவதில் வல்லவர்கள்.

பதவி மோகம்

தன்னைவிட வயதிலோ, வருமானத்திலோ, வசதியிலோ குறைந்தவர்களைவிட்டு சற்று தூரத்தில்தான் நிற்பார்கள். எத்தனை பிரச்னைகள் வந்தாலும் இவர் தலைவராக இருக்கும் இடத்தில் ஒவ்வொன்றாக நிதானமாக தீர்த்து வைத்து தன்னுடைய தலைமைப் பதவியைத் தக்க வைத்துக் கொள்வார்களே தவிர, அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலமாக எதையும் செய்து விமர்சனத்துக்கு உள்ளாக மாட்டார்கள். உலக அளவில் எலிசபெத் மகாராணி தன்னுடைய இறுதி காலம் வரை மகுடத்தைத் தன் தலையைவிட்டு இறக்காமல் வைத்திருந்தார் அல்லவா! அவர் ரிஷப ராசிக்காரர்.

தொழிலுக்குரிய எண்

ரிஷப ராசியினரின் தொழில் சம்பந்தமான முன்னெடுப்புகளை முயற்சிகளை மேற்கொள்வதற்கு ஒன்று அல்லது 9-ஆம் எண் வரும் நாட்கள் (9,18,27-ஆம் தேதிகள்) சிறப்பானவை. பொதுவாக ரிஷப ராசிக்காரர்கள் தனித்து நின்று தொழில் செய்வர். பங்குதாரர் அல்லது கூட்டாளி சேர்த்துக் கொள்வதில்லை. ரிஷபத்துக்கு ஏழாம் இடம் சந்திரன் நீசமாகும் ராசி என்பதால் கூட்டாளிகளால் மகிழ்ச்சி ஏற்படாது.

ரிஷப ராசி குழந்தை

ரிஷப ராசி சந்திரன் உச்சமடையும் ராசி என்பதால் பொதுவாக ரிஷப ராசியில் பிறந்த குழந்தை அழாமல் அடம் பிடிக்காமல் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். கொழுகொழு என்று அமுல் பேபி போல இருக்கும். குழந்தைகள் பெரும்பாலும் ஏப்ரல் பிற்பகுதியில் அல்லது மே மாதத்தின் முற்பகுதியில் பிறந்தவர்களாக இருப்பதுண்டு. ரிஷப லக்கினத்தில் பிறந்த குழந்தைகளுக்கும் இந்தப் பண்பு இருப்பதை பார்க்கலாம். இந்த ராசி நிலராசி என்பதால் இந்த ராசியில் பிறக்கும் குழந்தைகள் எதற்கும் அசைந்து கொடுக்காமல் அப்படியே இருப்பார்கள். இவ்வாறு சில நேரங்களில் இக்குழந்தைகள் நம் பொறுமையை சோதிப்பது உண்டு. எலிசபெத் மஹாராணி, மார்க் சூகெர்பெர்க் ஆகியோர் பிறந்த ராசி ரிஷபமாகும்.

பொது இடத்தில் கௌரவம்

ரிஷப ராசிக் குழந்தைகளை எந்த இடத்துக்கும் அழைத்து செல்லலாம். எங்கு வந்தாலும் பணிவாக பண்பாக நடந்துகொள்வர். இவர்கள் அமைதியாக, அறிவோடும் அடக்கத்தோடும் பேசுவார்கள். யாராவது இவர்களைக் கேலி செய்தால் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். பாய்ந்து சிதைத்துவிடுவார்கள். இவர்களைப் பலர் முன்னிலையில் பெற்றோர் அடிக்கவோ கோபிக்கவோ கூடாது. தடித்த வார்த்தைகளை இவர்களிடம் பேசக் கூடாது. அடிப்பது, பட்டினி போடுவது, முட்டி போட வைப்பது, திட்டுவது ஆகியவை கூடவே கூடாது.

கலையார்வம்

ரிஷப ராசிக் குழந்தைகள் மென்மையான நளினக் கலைகளில் ஆர்வம் காட்டுவர். அமைதியான பாடல்களை பாடவும், கேட்கவும் விரும்புவர். கர்நாடக சங்கீதம் பிடிக்கும் அளவுக்கு இவர்களுக்கு சத்தம் அதிகமான சினிமா பாட்டோ, ஹிப் ஹாப் பாடல்களோ பிடிக்காது. எப்போது பார்த்தாலும், மெலடி மெலடி என்றே கேட்டுக் கொண்டிருப்பர். அது போல, நடனத்திலும் குத்துப் பாட்டை ரசிப்பதைவிட மென்மையான உடல் அசைவுகள் கொண்ட கிளாசிக் நடனத்தை அதிகம் விரும்புவார்கள். அதில், பயிற்சி அளித்தால் சிறந்த கலைஞர்களாக உருவாகுவர்.

காதலுக்கு ராசியான எண்?

ரிஷபத்துக்கு ராசியான எண் ஐந்து. சுக்கிரனுக்கு ராசியான எண் ஆறு என்பதால் சிலருக்கு ஆறு ராசியாக இருக்கும். ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருப்பவர்களுக்கு 6,15,24,33,42,51 ஆகியவை ராசியாக இருக்கும். ஆறும் இரண்டும் இவர்களின் காதல் வாழ்க்கைக்கு ஏற்ற எண்களாகும். இவர்கள் தன் காதல் பற்றி முடிவு எடுக்கும் நாள் அல்லது முதன் முதலில் சந்திக்கும் நாள், பேசப்போகும் நாள் ஆகிய தேதிகளை ஆறு இரண்டு ஆகிய எண்களில் வரும்படி வைத்துக் கொண்டால் நல்லது.

The post என்ன சொல்லுது உங்கள் ராசி?: மூளையை மூலதனமாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்கள் appeared first on Dinakaran.

Related Stories: