அம்ரித் பாரத் திட்டத்திற்காக போடப்பட்ட தடுப்புகளால் சிரமம் திருவள்ளூர் ரயில்நிலையம் அருகே போக்குவரத்தை சீரமைக்க வேண்டும்: ரயில்வே நிர்வாகத்துக்கு பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை

திருவள்ளூர்: அம்ரித் பாரத் திட்டத்திற்காக போடப்பட்ட தடுப்புகளால் சிரமம் ஏற்பட்டுள்ளதையடுத்து, திருவள்ளூர் ரயில்நிலையம் அருகே போக்குவரத்தை சீரமைக்க வேண்டும் என்று ரயில்வே நிர்வாகத்துக்கு பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னையிலிருந்து திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணிக்கு புறநகர் மின்சார ரயில்களும், காட்பாடி, திருப்பதி, மும்பை, பெங்களூர் விரைவு ரயில்களும் என நாள்தோறும் 200க்கும் மேற்பட்ட ரயில்கள் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன.

மாவட்டத் தலைநகரான திருவள்ளூரில் இருந்து நாள்தோறும், பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ மாணவிகள், வியாபாரிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள், ஆண்கள் என ஒரு லட்சம் பேர் வரை திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். திருவள்ளூரிலிருந்து சென்னைக்கும், அரக்கோணத்திற்கும் செல்லும் ரயில்களில் அதிகளவு பயணிகள் செல்வதால் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த ரயில் நிலையமாக திருவள்ளூர் ரயில் நிலையம் இருக்கிறது. அதிகாலை 5 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் ரயில்களில் பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.

ரயில் நிலையத்தில் இறங்கும் பயணிகளை ஏற்றிச் செல்ல 200க்கும் மேற்பட்ட ரயில்வே ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கத்தினர் ரயில் நிலைய வளாகம் அருகே ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். இதேபோல் பிறபகுதி ஆட்டோ ஓட்டுனர்களும் ரயில் நிலையம் மற்றும் பெரியகுப்பம் பேருந்து நிலையம் அருகே நின்று பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். இந்நிலையில் தற்போது அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.28 கோடி மதிப்பீட்டில் ரயில்நிலையம் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனால் ரயில் நிலைய முகப்பு பகுதியில் ரயில்வே ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கத்தினர் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள அகரத் தெருவில் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர்.மேலும் ஆட்டோக்கள் எதுவும் ரயில் நிலையம் அருகில் வரக்கூடாது என்பதற்காக காவல் துறை சார்பில் பேருந்து நிலையம் அருகே தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே அமைக்கப்பட்ட அந்த தடுப்புகள் தற்போது ஒரே இடத்தில் வைக்கப்பட்டு இருப்பதால் நடந்து செல்பவர்கள், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் என அனைவரும் அவசரத்திற்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ரயில் நிலையம் அருகே போக்குவரத்து போலீசார் தொடர் கண்காணிப்பில் இல்லாததால் வாகனப் போக்குவரத்தை சீர்செய்ய முடியாத நிலையும் ஏற்படுகிறது. மேலும் அவசர அவசரமாக ரயில் நிலையத்திற்கு வருபவர்கள், ரயிலை பிடிக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம், திருவள்ளூர் மாவட்ட காவல் துறையுடன் இணைந்து ரயில்நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் போக்குவரத்தை சீர்செய்ய ரயிவ்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகளும், பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அம்ரித் பாரத் திட்டத்திற்காக போடப்பட்ட தடுப்புகளால் சிரமம் திருவள்ளூர் ரயில்நிலையம் அருகே போக்குவரத்தை சீரமைக்க வேண்டும்: ரயில்வே நிர்வாகத்துக்கு பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: