தென் மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: சரத்குமார் வேண்டுகோள்

சென்னை: தென் மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, 2023 டிசம்பர் மாத துவக்கத்தில் சென்னை உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை, வெள்ளம் ஏற்பட்டது போல, வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தற்போது திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, குமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தொடர் கனமழை விடாமல் பெய்து மக்களின் இயல்புவாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது.

குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் 150 ஆண்டுகளில் இல்லாத அளவு ஒரே நாளில் அதிகனமழை பெய்து, வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்து, உடைமைகளை பாதித்துள்ளன. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழைப்பொழிவு அதிகளவில் பதிவாவதால் ஆறுகள், குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள், நீர்தேக்கங்கள் நிரம்பி வழிகின்றன. எனவே, போர்க்கால நடவடிக்கையாக தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்கள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு அருகாமையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உரிய எச்சரிக்கை அளித்து பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்வதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். காட்டாற்று வெள்ளத்தால் ஏரிகளின் கரைகள் உடைப்பு, சாலைகள் துண்டிப்பு, வீடுகள் இடிந்து விழுந்து சேதம், விவசாய நிலங்கள் பாதிப்பு என பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளம் நிறைந்த பகுதிகளை மக்கள் பிரதிநிதிகள் பார்வையிட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதோடு, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சொந்தங்களும் மக்கள் பாதிக்காதவாறு அவர்களுடன் சேர்ந்து மீட்புப்பணிகளுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். தென் மாவட்ட கனமழை பொறுத்தவரை மீட்புப்பணியில் மிகவும் சவாலான விஷயமாக போக்குவரத்து அமைந்திருக்கும். பெரும்பாலும் கிராம ஊராட்சி ஒன்றியங்கள் நிறைந்த பகுதிகளில் உடனடியாக உதவி தேவைப்படும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நேரத்தில் உதவி சென்று சேர்வதற்கு நடமாடும் மருத்துவ சேவை வழங்குவது மிகவும் அவசியம். மக்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக மின்தடை தொடர்ந்தாலும், தொலைதொடர்பு துண்டிக்கப்படாமல் இருப்பது உறுதி செய்ய வேண்டும்.அத்தியாவசியப் பொருட்கள் சீராக விநியோகிக்கப் படுவதையும், மருத்துவ பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அரசு முன்னெச்சரிக்கையாக செய்து வந்தாலும், மழை பொழிவு குறைந்தவுடன் போர்க்கால அடிப்படையில் வெள்ளநீரை அப்புறப்படுத்தி மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்க வேண்டும். இந்த இக்கட்டான சூழலில் அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளித்து ஒன்றிணைந்து மீண்டு வருவோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post தென் மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: சரத்குமார் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: