விருதுநகர் வெம்பகோட்டை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தல்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை நீர்த்தேக்க அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவதால் கரையோர மக்கள் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக விருதுநகர் நகர் பகுதியில் நேற்று மாலை தொடங்கிய சாரல் மழை இன்று காலை வரை விடிய, விடிய பெய்தது. இதனால் நகரின் முக்கிய சாலைகளில் மழை நீர் குளம் போல் தேங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

மாவட்டத்தின் பிற பகுதிகளான சாத்தூர், சிவகாசி, இருக்கன்குடி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜ பாளையம், வத்திராயிருப்பு, பிளவக்கல் அணை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 2-வது நாளாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழை பெய்தது. இந்நிலையில், வெம்பக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையால் வெம்பக் கோட்டை நீர்த்தேக்க அணை இன்று அதிகாலை முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து தண்ணீர் வட்டாட்சியர் பாண்டீஸ்வரி முன்னிலையில் திறக்கப்பட்டது. வெம்பக்கோட்டை அணையிலிருந்து சாத்தூர் வைப்பாற்றுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. எனவே மக்கள் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாதுகாப்பாக இருக்குமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

The post விருதுநகர் வெம்பகோட்டை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: