தஞ்சையில் 400 ஆண்டு பழமையான கோயிலில் 12 ஐம்பொன் சிலைகள் கொள்ளை: திருடர்களின் கால் தடத்தை வைத்து குளத்தில் இருந்த சிலைகளை மீட்டது போலீஸ்

தஞ்சாவூர்: தஞ்சையில் பழமை வாய்ந்த கோயிலில் கொள்ளை போன நடராஜர் உள்பட 12 ஐம்பொன் சிலைகளை திருடர்களின் கால் தடத்தை வைத்து குளத்தில் இருந்த சிலைகளை போலீசார் மீட்டனர். தஞ்சாவூர் பழைய திருவையாறு சாலையில் 400 ஆண்டு பழமை வாய்ந்த வேதவள்ளி சமேத நாகநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் மார்கழி மாதம் முதல் நாளை முன்னிட்டு பூஜை செய்வதற்காக கோயில் பூசாரி நேற்று காலை வந்தார். அப்போது கோயில் கதவை திறந்து உள்ளே சென்றபோது சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த அறையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

பின்னர் உள்ளே சென்று பார்த்த போது அறையில் இருந்த 12 ஐம்பொன் சிலைகள் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்த தஞ்சாவூர் நேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில், கோயில் நுழைவுவாயில் கதவின் பூட்டு உடைக்காமல் பின்பக்கமாக சுவர் ஏறி குதித்து கோயிலுக்குள் நுழைந்த கொள்ளையர்கள், சிலைகள் வைக்கப்பட்டு இருந்த அறையின் இரும்பு கதவை உடைத்து அங்கிருந்த நடராஜர் சிலை, காமசுந்தரி, மாணிக்கவாசகர், அஸ்த்ரதேவர், பைரவர் பிச்சாடனர் சுவாமி, அம்பாள் சிலைகள் 2, நால்வர் சிலைகள் 4 என 12 ஐம்பொன் சிலைகள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து கொள்ளையர்கள் கால் தடத்தை வைத்து போலீசார் கோயில் பின்புறம் உள்ள குளத்தில் சோதனை மேற்கொண்டபோது குளத்தில் சிலைகள் இருந்ததும், கொள்ளையடித்த சிலைகளை குளத்தில் வீசிவிட்டு, பின்னர் வந்து எடுத்துக்கொள்ளலாம் என கொள்ளையர்கள் நினைத்து குளத்தில் வீசிசென்றிருக்க கூடும் என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார், கோயிலில் இருந்த பக்தர்கள் உதவியுடன் சிலைகளை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் சிலைகளுக்கு பூஜைகள் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு மீண்டும் சிலைகள் பாதுகாப்பாக அதே அறையில் வைக்கப்பட்டன. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

The post தஞ்சையில் 400 ஆண்டு பழமையான கோயிலில் 12 ஐம்பொன் சிலைகள் கொள்ளை: திருடர்களின் கால் தடத்தை வைத்து குளத்தில் இருந்த சிலைகளை மீட்டது போலீஸ் appeared first on Dinakaran.

Related Stories: