ஏன் எதற்கு எப்படி..?: செவ்வாய் பகவானை வணங்கி வழிபடலாமா?

– திருக்கோவிலூர் K.B.ஹரிபிரசாத் சர்மா

? நவகிரகங்களில் உள்ள செவ்வாய் பகவானை வணங்கி வழிபட்டால் நன்மை உண்டாகுமா?
– எம். சிவா, ராமநாதபுரம்.

நவகிரகங்களில் சூரியனைத் தவிர மற்ற கோள்களை தெய்வமாக வணங்க வேண்டிய அவசியமில்லை. இறைவன் இட்ட ஆணையை சரிவரச் செய்யும் பணியாட்களே நவகிரகங்கள். நவகிரகங்களுக்கும் தலைவனான இறைவனைத்தான் வணங்க வேண்டுமே தவிர நவகிரகங்களை பகவான் என்ற பட்டத்துடன் அழைப்பதோ அல்லது அவர்களை தனியாக வணங்க வேண்டும் என்ற அவசியமோ இல்லை. அதே நேரத்தில் அவர்களுக்கு உரிய ஹவிர்பாகத்தினை ஹோமத்தின் மூலமாக வழங்க வேண்டும் என்று நமது சாஸ்திரம் அறிவுறுத்துகிறது.

அதனால்தான் நம் வீட்டினில் நவகிரக ஹோமத்தினை நடத்துகிறோம். அதுபோன்று ஹோமம் செய்யும் நேரத்தில் உபயோகிப்பதற்குத்தான் நவகிரகங்களுக்கு என்று தனியாக வேதமந்திரங்களும் ஸ்லோகங்களும் உண்டு. அதனைக் கொண்டு கிரகங்களைத் தனியாக வணங்கி வழிபட வேண்டும் என்று நினைக்கக் கூடாது. சூரியனை மட்டும் சூரிய நாராயண சுவாமி என்று அழைப்போம், அத்துடன் அவரை வணங்குவதற்கு என அருண பாராயணம், ஆதித்ய ஹ்ருதயம் போன்ற மந்திரங்கள் உண்டு. சூரியனைக் கூட படமாக வைத்து வழிபடக்கூடாது. ப்ரத்யட்சமாக சூரியனை நோக்கி நமஸ்காரம் செய்து வழிபட வேண்டும்.

? சந்திராஷ்டமம் என்ன செய்யும்? ஏன் சந்திராஷ்டமம் குறித்து இத்தனை பயம்? அதனை சரி செய்ய பரிகாரம் இல்லையா?
– கிருஷ்ணகுமார், சென்னை.

பொதுவாக ஒவ்வொருவரின் ராசிக்கும் எட்டாவது ராசியில் சந்திரன் பயணிக்கின்ற காலத்தை சந்திராஷ்டம காலம் என்று சொல்கிறார்கள். உதாரணத்திற்கு சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு மீன ராசியில் சந்திரன் இருக்கும் காலம் சந்திராஷ்டமமாக இருக்கும். நமது மனநிலையை பராமரிப்பதே சந்திரனின் பணி. எட்டாம் இடம் என்பது அசுபமான பலன்களை உண்டாக்கக் கூடியது என்பதால் சந்திராஷ்டம காலத்தில் மனநிலை டென்ஷனாக இருக்கும்.

மனதில் குழப்பத்தினைத் தோற்றுவிக்கும்படியான நிகழ்வுகள் நம்மைச் சுற்றி நடக்கும் என்பதால் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது என்பதற்காக மாத ராசிபலன்களிலும் காலண்டர்களிலும் சந்திராஷ்டம நாட்களை தனிப்பட்ட முறையில் குறிப்பிடுகிறார்கள். மனதில் தெளிவற்ற நிலை இருக்கும் என்பதால் திருமணம், கிருகபிரவேசம் போன்ற சுபகாரியங்களில் சந்திராஷ்டம நாட்களை விலக்குகிறார்கள். அதுபோன்றே அதிமுக்கியமான அறுவை சிகிச்சைகளை செய்ய சந்திராஷ்டம நாட்களைத் தவிர்த்து விடுவார்கள்.

சந்திராஷ்டம நாட்கள் டென்ஷனை உண்டாக்கும் என்பது சரி, அதற்காக அந்த நாட்களில் பணி ஏதும் செய்யாமல், வெளியில் போகாமல் முடங்கிக் கிடக்க முடியுமா? விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் மனிதருக்கு சந்திராஷ்டம நாள் ஆயிற்றே என்று சிகிச்சை அளிக்காமல் சும்மா இருந்துவிட முடியுமா, இதற்கு பரிகாரம் ஏதும் கிடையாதா என்றால் நிச்சயமாக பரிகாரம் உண்டு.

சந்திரனுக்குரிய திரவம் ஆன பாலை குடித்துவிட்டு வேலையைத் துவக்கலாம். விநாயகப்பெருமானை வணங்கி பணியினைச் செய்யலாம். சந்திராஷ்டம நாட்களை ஜோதிடர்கள் முன்னமேயே குறித்துக்கொடுப்பது கூடுதல் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தானே அன்றி பணி செய்யாமல் சும்மா இருப்பதற்காக அல்ல என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

? வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்ப்பது நல்லதா?
– பி. கனகராஜ், மதுரை.

செல்லப் பிராணிகளை வளர்ப்பதில் தவறில்லை. ஆனால் அவற்றை தலைவாசல் படியைத் தாண்டி வீட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது. தோட்டம் மற்றும் கொல்லைப் புறத்தில் அவற்றை வைத்திருக்கலாம். நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளை வீட்டிற்குள் அனுமதிப்பதை சாஸ்திரம் ஏற்றுக் கொள்ளாது. பசுமாட்டினைக்கூட கிருகபிரவேசம் மற்றும் விசேஷமான தருணங்களில் கோபூஜை செய்யும்போது மட்டும்தான் வீட்டிற்குள் அனுமதிக்கலாமே தவிர மற்ற நேரங்களில் அவையும் தங்களுக்குரிய கொட்டகையில்தான் இருக்க வேண்டும். அதேபோல பறவைகளை கூண்டில் வைத்தும் மீன்களை தொட்டியில் வைத்து வளர்ப்பதையும் சாஸ்திரம் அனுமதிப்பதில்லை.

? பிள்ளையாருக்கு உடைக்கும் சிதறு தேங்காயை நாம் எடுத்து உண்ணலாமா?
– வண்ணை கணேசன், சென்னை.

திருஷ்டிக்காகவோ அல்லது காரியத்தடை நீங்க வேண்டும் என்பதற்காகவோ உடைக்கப்படும் சிதறு தேங்காயை நாம் எடுத்து உண்ணக்கூடாது. திருஷ்டி சுற்றி உடைக்கப்படும் பூசணிக்காயை எடுத்து சமைப்போமா? அல்லது திருஷ்டி சுற்றி போடப்படும் எலுமிச்சம்பழத்தை எடுத்து சாறு பிழிந்து சர்பத் என
குடிக்கத்தான் முடியுமா? அதே போலத்தான் அடுத்தவர்களின் திருஷ்டி போக வேண்டும் என்பதற்காகவும் தோஷம் கழிப்பதற்காகவும் காரியத்தடை நீங்குவதற்காகவும் சுற்றி உடைக்கப்படும் தேங்காயை எடுத்து உண்ணக்கூடாது.

அதே நேரத்தில் ஒருசிலர் வேண்டுதலுக்காக 108 தேங்காய்களை உடைப்பார்கள். அவ்வாறு வேண்டுதல் நிறைவேறிய பிறகு மனதில் நிறைவான மகிழ்ச்சியோடு உடைக்கப்படும் சிதறு தேங்காய்களின் துண்டுகளை இறைவனின் அருட்பிரசாதமாக எடுத்துக் கொள்ளலாம். அதில் தவறில்லை.

? பூர்வ ஜென்ம பாவம் என்றால் என்ன? அது தீர பரிகாரம் உண்டா..?
– பி.கனகராஜ், மதுரை.

அனுபவித்து தீர்ப்பதுதான் பரிகாரம். முன் ஜென்மத்தில் செய்த பாவத்திற்கான பலனை இந்த ஜென்மத்தில் அனுபவிப்போம் என்பதை வலியுறுத்திச் சொல்வது தான் பூர்வஜென்ம பாவம் என்பது. ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்று ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரமும் இந்த கருத்தையே நமக்கு போதிக்கிறது.

பூர்வ ஜென்ம க்ருதம் பாபம் வ்யாதி ரூபேண பீடதே என்பது ஸ்மிருதி வாக்கியம். அதாவது முன் ஜென்மத்தில் செய்த பாவத்தின் பலனை இந்த ஜென்மத்தில் வியாதி ரூபத்தில் அனுபவிப்போம் என்பதே இதற்கான பொருள். ஆக முன்ஜென்மத்தில் செய்த பாவத்தின் பலனை அனுபவித்துத் தீர்ப்பதுதான் இதற்கான பரிகாரம். ஆதரவற்றோருக்கும் ஏழை எளிய மக்களுக்கும் அன்னதானம் செய்வதன் மூலம் இதன் வீரியத்தைக் குறைத்துக்கொள்ள முடியும்.

உங்களுக்கு ஏற்படும் ஜோதிட சந்தேகங்களை கேள்விகளாக எழுதி கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

ஏன் எதற்கு எப்படி…?
தினகரன், ராசி பலன்கள்
தபால் பை எண். 2908,
மயி–லாப்–பூர், சென்னை – 600 004.

The post ஏன் எதற்கு எப்படி..?: செவ்வாய் பகவானை வணங்கி வழிபடலாமா? appeared first on Dinakaran.

Related Stories: