மிக்ஜாம் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு ரூ.9 லட்சம் மதிப்பிலான நிவாரண தொகை, பொருட்கள் அனுப்பி வைப்பு

திண்டுக்கல் : சென்னையில் மிக்ஜாம் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு திண்டுக்கல் ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் அறக்கட்டளை சார்பில் பெறப்பட்ட ரூ.4 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் மற்றும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதி ரூ.5 லட்சம் நிவாரண தொகை ஆகியவற்றை கலெக்டர் பூங்கொடியிடம் வழங்கினர்‌.
இதுகுறித்து கலெக்டர் தெரிவித்ததாவது:

சென்னையில் சில நாட்களுக்கு முன்னர் மிக்ஜாம் புயல் ஏற்பட்டு காற்றுடன், கனமழை பெய்த காரணமாக குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான அன்றாட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், சென்னையில் மழை வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில், அவர்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், வெளிமாவட்டங்களில் இருந்தும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில்,திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் முதற்கட்டமாக தண்ணீர் பாட்டில்கள் 7000, பிஸ்கட் பாக்கெட்டுகள் 11,808, பிரட் பாக்கெட்டுகள் 2,100, ரஸ்க் 2,926, சேமியா 5000, ரவா 5,100, அரிசி (5 கிலோ பை) 1,310, மெழுகுவர்த்தி 120, உணவு பொட்டலமிடும் டப்பாக்கள் 2,000 என மொத்தம் ரூ.11 லட்சம் மதிப்பிலான 37,364 எண்ணிக்கையிலான நிவாரண பொருட்கள் இரண்டு லாரிகளில் கடந்த டிச.7ம் தேதி சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தொடர்ந்து, திண்டுக்கல் ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் அறக்கட்டளை சார்பில் பெறப்பட்ட 4.5 டன் காய்கறிகள், அரிசி (26 கிலோ பை) 7 சிப்பம், ஆப்பிள் 500 கிலோ, தண்ணீர் பாட்டில் 3,000 (300 மில்லி லிட்டர்), பிஸ்கட் 3,200, பிரட் 600, படுக்கை விரிப்புகள் 100, டி-சர்ட் 60 என மொத்தம் ரூ.4 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவி பொருட்கள் மற்றும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோட்டை குமார், தனி தாசில்தார் சரவணக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மிக்ஜாம் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு ரூ.9 லட்சம் மதிப்பிலான நிவாரண தொகை, பொருட்கள் அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Related Stories: