எண்ணுர் கடலில் கலந்துள்ள கச்சா எண்ணெயை அகற்றும் பணிகளை விரைவுபடுத்த தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் ஆணை


சென்னை: எண்ணுர் கடலில் கலந்துள்ள கச்சா எண்ணெயை அகற்றும் பணிகளை விரைவுபடுத்த தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் ஆணையிட்டுள்ளது. எண்ணெயை அகற்றும் பணியில் ஈடுபடுவோருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். சிறார்களை எண்ணெய் அகற்றும் பணிகளுக்கு அனுப்ப வேண்டாம் என பெற்றோருக்கு அறிவுறுத்த வேண்டும். வெள்ளத்தில் கச்சா எண்ணெய் கலந்து வந்தது தொடர்பாக தாமாக முன்வந்து தென்மண்டல பசுமைத்தீர்ப்பாயம் விசாரணை நடத்தியது.

எண்ணெய் கசிவு சம்பவத்துக்கு யார் காரணமோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எண்ணெயை அகற்றும் பணிகளை விரைவுபடுத்த வழக்கை நாளை மறுநாள் பசுமை தீர்ப்பாயம் ஒத்திவைத்தது. கடலில் எண்ணெய் கலப்பதை தடுக்க 75 மீட்டர் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. சென்னை துறைமுகத்தில் இருந்து 380 மீ, காரைக்கால் துறைமுகத்தில் இருந்து 350 மீ தடுப்புகளும் கொண்டு வரப்பட்டுள்ளன என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியது.

கனமழை காரணமாக புழல் ஏரியில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரில் கச்சா எண்ணெய் கழிவுகள் கலந்ததால், எண்ணூர் முகத்துவார ஆற்று நீர் மற்றும் நெட்டுக்குப்பம், தாழங்குப்பம், எண்ணூர் குப்பம், காட்டுக்குப்பம் போன்ற பல பகுதிகள் மற்றும் கடலில் எண்ணெய் படலம் கடந்த ஒரு வாரமாக மிதந்து கொண்டிருக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, கடலோரப் பகுதியில் வசிக்கும மக்களுக்கு தோல் பிரச்னை, சுவாச கோளாறு, கண் எரிச்சல் போன்ற நோய்கள் ஏற்பட்டுள்ளன.இந்த நிலையில், எண்ணூர் எண்ணெய் கசிவு தொடர்பான வழக்கு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மாசு கட்டுப்பாட்டை வாரியம் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தது. இதைத் தொடர்ந்து தமிழக அரசு தரப்பில், “எண்ணெய் கசிவு ஏற்பட்டதற்கு சிபிசிஎல் ஆலை நிர்வாகமே காரணம். சிபிசிஎல் அதிகப்படியான எண்ணெயை சேமித்து வைத்ததே எண்ணெய் கசிவு காரணம். டிசம்பர் 3 முதல் டிசம்பர் 5ம் தேதி வரை 3 நாட்கள் எண்ணெய் கசிவு நடந்துள்ளது. டிசம்பர் 7ல் எண்ணெய் கசிவு தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த குழுவின் ஆய்வு அறிக்கையின் படி தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் சிபிசிஎல் நிறுவனத்திற்கு சில வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது. பக்கிங்ஹாம் கால்வாய், எண்ணூர் பகுதிகளில் மீட்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். சிபிசிஎல் நிறுவனத்தில் பைப்லைன், டேங்க் ஆகியவற்றில் கசிவு ஏற்படாததை உறுதி செய்ய வேண்டும். விதிகளை மீறி சிபிசிஎல் நிறுவனம் எண்ணெய் கழிவுகளை வெளியேற்றியதை கண்டறிந்தால் நிறுவனத்தின் செயல்பாட்டிற்கு இடைக்கால தடை விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்த நிலையில் வழக்கு விசாரணையை டிசம்பர் 14ம் தேதிக்கு தீர்ப்பாயம் ஒத்திவைத்தது.

The post எண்ணுர் கடலில் கலந்துள்ள கச்சா எண்ணெயை அகற்றும் பணிகளை விரைவுபடுத்த தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் ஆணை appeared first on Dinakaran.

Related Stories: