தி.மலை அண்ணாமலையார் கோயிலில் இன்று மாலை குபேர கிரிவலம்: அதிகாலை முதலே திரண்ட பக்தர்கள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக குபேர கிரிவலம் புகழ்பெற தொடங்கியுள்ளது. கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்களில், ஏழாவது சன்னதியாக அமைந்திருக்கிறது குபேர லிங்கம். செல்வத்துக்கு அதிபதியாக கருதப்படும் குபேரன், சிவபெருமானை வழிபட்ட இடத்தில் அமைந்திருப்பதால், குபேர லிங்க சன்னதி என அழைக்கின்றனர்.

ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் தேய்பிறை சதுர்தசி திதி மற்றும் சிவராத்திரி இணைந்து வரும் நாளன்று, குபேரன் கிரிவலம் சென்று வழிபடுவதாக நம்பிக்கை. எனவே, செல்வத்துக்கு அதிபதியாக கருதப்படும் குபேரன் கிரிவலம் செல்லும் நாளில், அவருடன் இணைந்து கிரிவலம் சென்றால் செல்வம் பெருகும் என பக்தர்கள் நம்புகின்றனர். அதனால், கடந்த சில ஆண்டுகளாக ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர்.
அதன்படி இந்த ஆண்டு குபேர கிரிவலம் செல்ல இன்று உகந்த நாள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆந்திரா, தெலங்கானா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். அதிகாலை முதலே பக்தர்கள் திரண்டுள்ளதால் கூட்டம் அலைமோதுகிறது. இன்றும் சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டிருந்தது. பொது தரிசன வரிசையில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

பிரதோஷ காலமான மாலை 4.30 மணிக்கு தொடங்கி 6 மணி வரை குபேர லிங்க சன்னதியில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.குபேர பூஜை நடைபெறும்போது, குபேர லிங்க சன்னதியில் தரிசனம் செய்துவிட்டு, அதன்பிறகு பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்குவது வழக்கம். இதனால் மதியத்திற்கு பிறகு பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, குபேர லிங்கம் சன்னதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

The post தி.மலை அண்ணாமலையார் கோயிலில் இன்று மாலை குபேர கிரிவலம்: அதிகாலை முதலே திரண்ட பக்தர்கள் appeared first on Dinakaran.

Related Stories: