மிக்ஜாம் புயல் பாதிப்பு; சென்னையில் 24 மணி நேரமும் உழைக்கும் துப்புரவுப் பணியாளர்கள்: 5 நாட்களில் 35,000 டன் குப்பைகள் சேகரிப்பு

சென்னை: புயல், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னையில் மட்டும் இதுவரை 35,000 டன்னுக்கு அதிகமான குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. 2 நாட்கள் கோடி தீர்த்த கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளம் இழுத்து வந்த டன் கணக்கான குப்பைகளை சுத்தம் செய்ய சென்னை மாநகராட்சி ஊழியர்கள் 23,000 பேர் 24 மணி நேரமும் உழைத்து வருகின்றனர். வெள்ளம் வடிந்து விட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் சென்னி மாநகராட்சி மேற்கொண்ட போர்க்கால நடவடிக்கையில் 4 நாட்களில் மலைக்கும் அளவிற்கு மலை போல குவிந்திருந்த 28,000 டன் குப்பைகள் மற்றும் கழிவு பொருட்கள் அகற்றப்பட்டுள்ளன.

இந்த குப்பைகள் அனைத்தும் 20 கனரக வாகனங்கள் மற்றும் 12 டிப்பர் லாரிகள் மூலம் சென்னை புளியந்தோப்பில் உள்ள மாநகராட்சி கழிவுப்பொருள் கையாளும் கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன. டிசம்பர் 6 முதல் 9ம் தேதி வரை சென்னையில் மட்டும் சுமார் 25,100 டன் குப்பைகள் மற்றும் 3,400 டன் மரங்கள் உள்ளிட்ட தாவர கழிவுகள் உள்பட 35,000 மெட்ரிக் டன் குப்பைகள் மற்றும் கழிவு பொருட்கள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

புளியந்தோப்பு கழிவு பொருள் கையாளும் கிடங்கு மட்டுமல்லாது சென்னையில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் உள்ள குப்பை கிடங்குகளுக்கும் அனுப்பப்பட்டன. குப்பைகளை சேகரித்து அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புயல் வெள்ளத்திற்கு பிறகு குப்பைகள் மற்றும் கழிவு பொருட்களின் தேக்க விகிதம் பன்மடங்கு அதிகரித்து வருகிறது. எனவே குப்பைகள் மற்றும் கழிவு பொருட்களை அகற்றும் பணி தொடர்ந்து தீவிரப்படுத்தபட்டு வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

The post மிக்ஜாம் புயல் பாதிப்பு; சென்னையில் 24 மணி நேரமும் உழைக்கும் துப்புரவுப் பணியாளர்கள்: 5 நாட்களில் 35,000 டன் குப்பைகள் சேகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: