ஒடிசா மதுபான நிறுவனத்தில் 4 நாள் சோதனையில் ரூ.290 கோடி சிக்கியது: இதுவரை இல்லாத சாதனை என ஐடி அதிகாரிகள் தகவல்

புவனேஸ்வர்: ஒடிசா மதுபான நிறுவனத்தில் 4 நாள் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத பணம் ரூ.290 கோடியாக இருக்கலாம் என கூறப்படுகிறது. நாட்டிலேயே இதுவரை இவ்வளவு பணம் ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டதில்லை என அதிகாரிகள் கூறி உள்ளனர். ஒடிசாவில் மதுபானம் தயாரிக்கும் பால்டியோ சாஹூ குழும நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 6ம் தேதி சோதனை மேற்கொண்டனர். அந்த குழுமம், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் மாநிலங்களவை எம்பி தீரஜ் பிரசாத் சாஹூவுடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது. அந்நிறுவனத்தில் கட்டுகட்டாக கணக்கில் வராத பணம் பீரோவில் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த புகைப்படங்கள் வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து சம்பல்பூர், ரூர்கேலா, போலன்கிர், சுந்தர்கர், புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் குழுமத்திற்கு சொந்தமான கட்டிடங்கள், வீடுகள் மற்றும் குழுமத்துடன் தொடர்புடைய முக்கிய நபர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் நேற்று முன்தினம் வரை ரூ.225 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. இவை 156 மூட்டைகளாக கட்டி, பணத்தை எண்ணி சரிபார்க்க எஸ்பிஐ வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விவகாரம் குறித்து நேற்று முன்தினம் டிவிட்டரில் கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, ‘பொதுமக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் திரும்பப் பெறப்படும்’ என உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனையை தீவிரப்படுத்தினர். போலன்கிர் மாவட்டம் சுதாபாரா பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் மேலும் 20 மூட்டை பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ரூ.50 கோடிக்கு மேல் இருக்கலாம் என அதிகாரிகள் கூறி உள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் தொடர்ந்து வங்கிகளில் எண்ணப்பட்டு வருகிறது. கடந்த 4 நாள் சோதனையில் இதுவரை ரூ.290 கோடி வரையிலும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் கூறி உள்ளனர். இதுவரை இவ்வளவு தொகை ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டதில்லை என்றும் அவர்கள் கூறி உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்பி தீரஜ் பிரசாத் சாஹூ இதுவரை எந்த பதிலும் தரவில்லை. அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டுமென ஜார்க்கண்ட் பாஜ தலைவரும் முன்னாள் முதல்வருமான பாபுலால் மராண்டி கூறி உள்ளார்.

* பணத்தை எண்ணி, எண்ணி இயந்திரமே பழுதாகி விட்டது

இந்த சோதனையில் 150 ஐடி அதிகாரிகள் ஈடுபட்டுள்ள நிலையில், ஐதராபாத்தில் இருந்து மேலும் 20 பேர் வரவழைக்கப்பட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட பண மூட்டைகளை கொண்டு செல்ல மேலும் அதிகமான வாகனங்கள் தேவைப்படுவதாக அதிகாரிகள் நேற்று கூறினர். இந்த பணம் அனைத்தும் சம்பல்பூர் மற்றும் போலங்கிரில் உள்ள 2 எஸ்பிஐ வங்கி கிளைகளில் எண்ணப்படுகின்றன. பெரும்பாலும் 500 ரூபாய் நோட்டுகள் என்பதால் பணம் எண்ணும் பணியில் சிரமம் இருக்கிறது. 40 பெரிய மற்றும் சிறிய இயந்திரங்கள் மூலம் பணம் எண்ணப்படுகிறது. சில இயந்திரங்கள் பணத்தை எண்ணி, எண்ணி பழுதடைந்தே விட்டன. அவற்றுக்கு பதிலாக வேறு வங்கியில் இருந்து இயந்திரத்தை அதிகாரிகள் பெற்றுள்ளனர்.

The post ஒடிசா மதுபான நிறுவனத்தில் 4 நாள் சோதனையில் ரூ.290 கோடி சிக்கியது: இதுவரை இல்லாத சாதனை என ஐடி அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: