புதுடெல்லி: ‘எனது உத்தரவாதத்தை மக்கள் நம்புகிறார்கள் என்பதை சமீபத்தில் தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்தி உள்ளன. சில அரசியல் கட்சிகள் தவறான வாக்குறுதிகளை தருவதன் மூலம் எதையும் சாதிக்க முடியாது’ என பிரதமர் மோடி கூறி உள்ளார். விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா பயனாளிகளுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது: நாங்கள் அரசுக்கும் மக்களுக்கும் இடையே நேரடி உறவை, உணர்வுப்பூர்வமான பிணைப்பை ஏற்படுத்தி உள்ளோம். எங்கள் அரசு வெறும் ‘அப்பா அம்மா’க்கள் ஆளும் அரசல்ல. தாய், தந்தைகளுக்கு சேவை செய்யும் அரசு. மகன் தனது பெற்றோருக்கு சேவை செய்வதைப் போன்றது. அதே போல நானும் உங்களுக்கு சேவை செய்ய பணியாற்றுகிறேன்.
என்னைப் பொறுத்த வரை ஒவ்வொரு ஏழையும், ஒவ்வொரு தாயும், மகளும், சகோதரியும், ஒவ்வொரு விவசாயியும், ஒவ்வொரு இளைஞனும் விஐபிதான். எனது உத்தரவாதங்களை மக்கள் நம்புகிறார்கள் என்பதை சமீபத்திய சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்தி உள்ளன. அந்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மோடியின் உத்தரவாதம் என்பது அனைத்து உத்தரவாதங்களையும் நிறைவேற்றுவதற்கான உத்தரவாதம் என்று மக்கள் நம்புகிறார்கள். ஆனால், நம்மை எதிர்ப்பவர்களை மக்கள் ஏன் நம்பவில்லை? ஏனெனில், பொய்யான வாக்குறுதிகள் மூலம் எதையும் சாதிக்க முடியாது என்பதை சில அரசியல் கட்சிகள் இன்னும் புரிந்து கொள்ளாததுதான் காரணம். தேர்தல்கள் மக்கள் மத்தியில் வெற்றி பெறக் கூடியவை. வெறும் சமூக வலைதளத்தில் அல்ல. தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன் மக்களின் மனதை வெல்வது அவசியம். மக்களை குறைத்து மதிப்பிடுவது சரியல்ல. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
The post தவறான வாக்குறுதியால் சாதிக்க முடியாது எனது உத்தரவாதத்தை மக்கள் நம்புகிறார்கள்: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.
