மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு

நாமக்கல், டிச.9: நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த நாடு முழுவதும் உள்ள 30 ஆயிரம் மாணவர்களுக்கு, பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம், ஒன்றிய அரசால் செயல்படுத்தப்படவுள்ளது. தமிழகத்தை சார்ந்த 3,093 பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான பெற்றோரது வருமான வரம்பு ₹2.50 லட்சம் ஆகும். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 31ம் தேதி ஆகும். கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தை சரிபார்க்க கடைசி நாள் 2024 ஜனவரி 15ம்தேதி ஆகும்.

கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ, மாணவிகள், தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் விண்ணப்பம் புதுப்பித்தல் என்ற இணைப்பில் சென்று, கடந்த ஆண்டில் பெறப்பட்ட விண்ணப்ப எண் மற்றும் பாஸ்வேர்டு பதிவு செய்து, 2023-2024ம் ஆண்டிற்கான விண்ணப்பத்தை புதுப்பித்து கொள்ள வேண்டும். இத்திட்டத்தின் கீழ், நடப்பாண்டில் புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11ம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகள், முறையே 8 மற்றும் 10ம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டு, கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

எனவே, 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக 8 மற்றும் 10ம் வகுப்புகளில் மதிப்பெண்கள் பெற்ற, பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள், தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில், புதிய விண்ணப்பம் பதிவேற்றம் என்ற லிங்க்கில் சென்று, தங்களது விபரங்களை பதிவு செய்ய வேண்டும். இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிய தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில், (https://scholarships.gov.in) மற்றும் ஒன்றிய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணைய தளத்தை (https://socialjustice.gov.in)அணுகி கல்வி உதவித்தொகை பயன்களை பெறலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: