எடப்பாடி மீதான ரூ.4800 கோடி டெண்டர் முறைகேடு புகார் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கலாம்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: எடப்பாடி பழனிசாமி மீதான ரூ.4800கோடி டெண்டர் முறைகேட்டு ஊழல் வழக்கை சட்டத்திற்கு உட்பட்டு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் ரூ.4,800 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக கூறி, முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அளித்த புகார் மீது சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் 2018ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆரம்ப கட்ட விசாரணையில் முறைகேடு நடைபெற்றதற்கான முகாந்திரம் இல்லை என லஞ்ச ஒழிப்பு துறை அறிக்கை அளித்தும், இந்த முறைகேடு புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்தும்படி கடந்த 2018ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.

இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததுடன், இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரித்து முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து மேற்கண்ட உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்,\” இந்த விவகாரத்தில் கடந்த 2018ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையில் குறை காண முடியாது. மேலும் ஆட்சி மாற்றம் காரணமாக மீண்டும் புதிதாக விசாரணை நடத்த தேவையில்லை என்றும், அதேப்போன்று சிறப்பு புலனாய்வு விசாரணை கோரிய ஆர்.எஸ்.பாரதி மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என கடந்த ஜூலை 18ம் தேதி உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மீதான ரூ.4.800கோடி டெண்டர் முறைகேடு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.எம்.திரிவேதி மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமணன், ‘‘எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை மீண்டும் முதலில் இருந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தது. ஆனால் உயர்நீதிமன்றம் அதனை மறுத்து தடை விதித்து விட்டது.

குறிப்பாக எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்கும் போது அவரது கட்டுப்பாட்டில் தான் லஞ்ச ஒழிப்புத்துறை இருந்தது. அதனால் தனக்கு சாதகமான அதிகாரிகளை பயன்படுத்தி வழக்கை திசை திருப்பி முடித்து வைத்து விட்டார். மேலும் அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கும் அவர் தடையாக இருந்துள்ளார். குறிப்பாக வழக்கை விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அரசு அனுமதி வழங்கிய பின்னர், உயர்நீதிமன்றம் அதனை ஏன் ரத்து செய்ய வேண்டும். மாநில அரசின் உத்தரவை உயர்நீதிமன்றம் எப்படி தடுக்க முடியும். இந்த விவகாரத்தில் முன்னாள் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் என்பது மிகவும் தீவிரமானது.

உன்மையை சொல்ல வேண்டுமென்றால் இந்த விசாரணை என்பது அரசின் கொள்கையோ அல்லது பழிவாங்கும் நடவடிக்கையோ கிடையாது. எடப்பாடி பழனிசாமி செய்தது கிரிமினல் குற்றம். அதனால் விசாரணை கோருகிறோம். மேலும் இது லஞ்ச ஒழிப்புத்துறையின் கடமை ஆகும். குறிப்பாக சட்டம் என்பது அதன் போக்கில் இருக்க வேண்டும். அதில் எந்த தலையீடும் இருக்க கூடாது. மாநிலத்தில் அரசு அதிகாரம் மாறினாலும், மறு விசாரணை செய்ய எங்களுக்கு உரிமை உண்டு. அதைத் தடுக்க முடியாது என தெரிவித்தார்.

இதையடுத்து அப்போது குறுக்கிட்ட நீதிபதி பி.எம்.திரிவேதி,‘‘சட்டத்தின் அடிப்படையில், சட்டத்திற்கு உட்பட்டு நீங்கள் தாராளமாக விசாரணை செய்யலாம். அதனை நீதிமன்றம் மறுக்கவில்லை. மேலும் லஞ்ச ஒழிப்புத் துறை தொடர்ந்து விசாரிக்க தடுப்பது என்ன? நீங்கள் தாராளமாக விசாரிக்கலாம் சட்டத்திற்கு உட்பட்ட எந்த விசாரணையையும் நீங்கள் தாராளமாக செய்யலாமே. இருப்பினும் இந்த வழக்கில் கடந்த முறை லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தான் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது எந்த பிரச்னையும் இல்லை என கூறப்பட்டது. ஆனால் தற்போது வேறு விதமாக கூறுகிறீர்கள்’’ என கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த தமிழ்நாடு வழக்கறிஞர், ‘‘அப்போது ஆட்சி அதிகாரத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமி தனக்கு சாதகமான அதிகாரிகளை வைத்து லஞ்ச ஒழிப்புத்துறையை தவறாக கையாண்டுள்ளார். ஆட்சி மாற்றத்திற்கு பின் அது உறுதியாகியுள்ளது. அதன் அடிப்படையில் தான் விசாரணை நடத்த அனுமதி கேட்கிறோம் ’’ என தெரிவித்தார்.

இதையடுத்து கடும் எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம், ‘‘இந்த வழக்கில் மனுதாரராக இருந்தவர் தற்பொழுது ஆளுங்கட்சியை சேர்ந்தவராக உள்ளவர். அவர் தொடர்ந்து வழக்கில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் லஞ்ச ஒழிப்புத்துறை முடிந்துவிட்ட ஒரு வழக்கில் மீண்டும் அனுமதி வேண்டி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்கிறார்கள். இதை அரசியல் என்று கூறாமல் என்னவென்று கூறுவது’’ என தெரிவித்தார். இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் உரிய உத்தரவுகள் பிறப்பித்துள்ளது. அப்படி இருக்க நாங்கள் இதில் ஏன் தலையிட வேண்டும்.

அதனால் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம். இருப்பினும் இந்த விவகாரத்தில் சட்டத்தின் அடிப்படையில், சட்டத்திற்கு உட்பட்டு தமிழ்நாடு அரசின் பரிந்துரையுடன் கூடிய உத்தரவின்படி லஞ்ச ஒழிப்புத்துறை இந்த வழக்கை தாராளமாக விசாரணை செய்யலாம். அதற்கு எந்தவித நிபந்தனையோ அல்லது மறுப்போ உச்ச நீதிமன்றம் தெரிவிக்கவில்லை’’ என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். சட்டத்திற்கு உட்பட்டு தமிழ்நாடு அரசின் பரிந்துரை யுடன் கூடிய உத்தரவின்படி லஞ்ச ஒழிப்புத்துறைஇந்த வழக்கை தாராளமாக விசாரிக்கலாம். அதற்கு எந்தவித நிபந்தனையோ அல்லது மறுப்போ உச்ச நீதிமன்றம் தெரிவிக்கவில்லை

The post எடப்பாடி மீதான ரூ.4800 கோடி டெண்டர் முறைகேடு புகார் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கலாம்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: