நிலையான, சிறந்த அரசுக்கு மக்கள் வாக்களித்துள்ளனர்: உத்தரகாண்ட் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

டேராடூன்: சமீபத்திய தேர்தல்களில் மக்கள் நிலையான மற்றும் வலுவான அரசு அமைய வாக்களித்திருப்பதாக உத்தரகாண்ட் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்தார். உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள வன ஆராய்ச்சி நிறுவனத்தில் நடந்த ‘உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டின் கருப்பொருள் ‘அமைதி முதல் செழிப்பு வரை’ என்பதாகும். பின்பு, அங்கு கண்காட்சியையும் திறந்து வைத்தார். அதன் பிறகு, உலக முதலீட்டாளர் மாநாட்டில் அவர் பங்கேற்று பேசியதாவது:

இந்தியாவில் கொள்கை அடிப்படையிலான நிர்வாகம் நடந்து வருகிறது. அரசியல் நிலைத்தன்மைக்கான நாட்டு மக்களின் உறுதியான தீர்வு தெரிய வந்துள்ளது. சமீபத்தில் நடந்த தேர்தல்கள், உத்தரகாண்டில் கடந்தாண்டு நடந்த தேர்தல்களில் மக்கள் நிலையான மற்றும் வலுவான அரசு அமைய வாக்களித்துள்ளனர். அரசின் சாதனைகளின் அடிப்படையில் மக்கள் வாக்களித்துள்ளனர். இன்னும் சில ஆண்டுகளில், நான் 3வது முறை ஆட்சியில் இருக்கும் கால கட்டத்தில், இந்தியா 3வது பெரிய பொருளாதார நாடாக வளர்ச்சி அடையும்.

நிலையான அரசு, முதலீட்டுக்கு ஆதரவான கொள்கை, சீர்திருத்தத்தின் மூலம் மாற்றத்திற்கான விருப்பம் மற்றும் வளர்ச்சியை நோக்கிய உறுதிப்பாடு ஆகியவை முதல் முறையாக ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதால், இந்திய முதலீட்டாளர்கள், நிறுவனங்களுக்கு முதலீடு செய்ய இதுவொரு சிறந்த தருணம். மற்ற நாடுகளை சார்ந்திருக்கும் நிலையை மாற்றி அமைக்க முதலீட்டாளர்கள் வினியோக சங்கிலியை வலுப்படுத்த வேண்டும். ஏற்றுமதியை அதிகரிக்கும் அதே நேரத்தில் இறக்குமதியை குறைக்க வேண்டும்.

முழுவதும் திறமைகளை கொண்ட உத்தரகாண்ட் மாநிலம் வளர்ச்சிக்கான புதிய கதவுகளை திறக்கும். இவ்வாறு அவர் பேசினார். இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, ஒன்றிய அமைச்சர்கள், பல்வேறு நாடுகளின் தூதர்கள், முன்னணி தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.

* இந்தியாவில் திருமணம்
பிரதமர் மோடி மேலும் கூறுகையில், “திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக கூறுவதுண்டு. பிறகு நம் நாட்டு இளைஞர்கள் கடவுள்களின் பூமிக்கு வராமல், ஏன் வெளிநாடு சென்று திருமணம் செய்து கொள்கின்றனர்? இளைஞர்கள் மற்றும் பெரும் செல்வந்தர்கள் தங்கள் குடும்ப திருமணங்களில் ஆண்டுக்கு ஒன்றை உத்தரகாண்டில் நடத்த முன்வர வேண்டும். தற்சார்பு இந்தியா போன்று இந்தியாவில் திருமணம் என்பது ஒரு இயக்கமாக மாற வேண்டும்,” என்று தெரிவித்தார்.

* ரூ.44,000 கோடி முதலீடு
மாநாட்டில் பேசிய உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, “முதலீட்டாளர்கள் மாநாட்டில் அவர்களுடன் ரூ.2.5 லட்சம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்த இலக்கை விட கூடுதலான முதலீட்டு திட்டங்கள் கையெழுத்தாகி உள்ளது. இதுவரை ரூ.44,000 கோடி முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்,” என்று தெரிவித்தார்.

The post நிலையான, சிறந்த அரசுக்கு மக்கள் வாக்களித்துள்ளனர்: உத்தரகாண்ட் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: