மாநில அரசுகளுடன் மோதல் ஆளுநர்கள் நியமனத்தில் மாற்றம் வேண்டும்: மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆவேசம்

புதுடெல்லி: மாநில அரசுகளுடன் மோதுவதால் ஆளுநர்கள் நியமனத்தில் மாற்றம் வேண்டும் என்று மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் கூறினர். மாநிலங்களவையில் காலனி ஆதிக்கத்தின் தொடர்ச்சியாக உள்ள ஆளுநர்கள் நியமனம் மற்றும் பதவிக்காலம் தொடர்பான அரசியலமைப்பு விதிகளில் மாற்றம் செய்யக்கோரி மார்க்சிஸ்ட் எம்பி சிவதாசன் தனிநபர் மசோதா தாக்கல் செய்தார். இந்த மசோதா நேற்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆளுநர்கள் நியமனத்தில் மாற்றம் வேண்டும் என்று தெரிவித்தனர். அதன்விவரம் வருமாறு:

* ஹனுமந்தையா(காங்கிரஸ்): பெரும்பாலான நேரங்களில் ஆளுநர்கள் அரசியலமைப்புச் சட்டத்தை விட மத்தியில் ஆளும் ஆட்சியின் நடைமுறையை கடைபிடிக்கிறார்கள். சர்க்காரியா கமிஷன் பரிந்துரைத்தபடி, ஒன்றிய அரசால் கவர்னர் நியமனம் செய்யப்படுவதற்கு முன், மாநில அரசை கலந்தாலோசிக்க வேண்டும். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பான அரசியலமைப்புச் சட்டத்தின் 200வது பிரிவின்படி, தங்கள் பணிகளைச் செய்யத் தவறிய ஆளுநர்களை திரும்ப அழைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.

* ஜவார் சிர்கார்(திரிணாமுல்): அனைத்து ஆளுநர்களும் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளால் இயக்கப்படுகிறார்கள்.

* மனோஜ் குமார் ஜா(ஆர்ஜேடி): பாஜ எதிர்க்கட்சியாக உள்ள மாநிலங்களில், எதிர்க்கட்சிகளின் 60 சதவீத பணிகளை ஆளுநர் செய்கிறார்.

* ஜான் பிரிட்டாஸ் (மார்க்சிஸ்ட்): மாநில அரசுகளை சீர்குலைக்கவும், அவதூறு செய்யவும் கவர்னர்கள் ஒன்றிய அரசின் கைகளில் கருவிகளாக மாறியுள்ளனர்.

* சந்தோஷ் குமார்(இந்திய கம்யூனிஸ்ட்): எங்கள் கட்சி ஆளுநர் பதவிக்கு எதிரானது. அந்த பதவியை ரத்து செய்ய விரும்புவதால், மசோதாவை ஆதரிக்க முடியாது. ஆளுநர்கள் அரசியல் சூழ்ச்சியாளர்களாக மாறிவிட்டனர்.

* வில்சன் (திமுக): கவர்னர்கள் பதவி என்பதும் பொறுப்பு மட்டும் தான் என்பதால் சட்டசபை சபாநாயகருக்கு கவர்னரின் அதிகாரம் வழங்கப்படலாம்.

* ஆர்.கிரிராஜன்(திமுக): தமிழ்நாட்டில் ஆளுநர் செய்யும் மோதல்களால் பிரச்னை உருவாகி உள்ளது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டும்.

* சண்முகம் (திமுக): மாநில அரசுடன் கலந்தாலோசித்த பிறகே கவர்னர் நியமிக்கப்பட வேண்டும். மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதுபற்றி முடிவு எடுக்கப்பட வேண்டும்.

* அஜய்குமார் சிங்(பா.ஜ): அரசியலமைப்பின் 356 வது பிரிவை அதிகபட்சமாக காங்கிரஸ் 51 முறை தவறாகப் பயன்படுத்தியுள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது.

The post மாநில அரசுகளுடன் மோதல் ஆளுநர்கள் நியமனத்தில் மாற்றம் வேண்டும்: மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆவேசம் appeared first on Dinakaran.

Related Stories: