இந்தியாவில் இருந்து வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறுவது ஏன்? மக்களவையில் கனிமொழி எம்.பி கேள்வி

புதுடெல்லி: இந்தியாவில் இருந்து வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறுவது ஏன்? அதை தடுக்க ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்று மக்களவையில் கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பினார். மக்களவையில் திமுக எம்பி கனிமொழி எழுப்பிய கேள்வியில், ‘‘இந்தியாவில் இருந்து வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறுவது அதிகரித்திருப்பது ஏன். 2018ம் ஆண்டு 102 வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொடங்கப்பட்டன. ஆனால் அதே வருடத்தில் 111 வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் செயல்பாடுகளை நிறுத்தி விட்டனர்.

குறிப்பாக கோவிட் தொற்றுக்குப் பிறகு பல வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவுக்கு செல்ல தயங்குகிற நிலையில் கூட, நாம் அவர்களுக்கு ஏற்ற வணிகச் சூழலை அமைத்துத் தந்துள்ளோம். அதனால் இதுகுறித்து எடுத்த நடவடிக்கை என்ன’’ என கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘வெளிநாட்டு வணிக நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது கிளை அலுவலகத்தையோ, திட்ட அலுவலகத்தையோ, தொடர்பு அலுவலகத்தையோ, அல்லது தங்களின் பிரநிதிகள் அலுவலகத்தையோ தொடங்கலாம்.

இதற்கு பாரத ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் மற்றும் அரசின் பிற துறைகளின் விதிமுறைகளை அவர்கள் பூர்த்தி செய்ய வேண்டும். இதுபோன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் அலுவலகங்கள் இந்தியாவில் தொடங்கப்பட்ட 30 நாட்களுக்குள் அந்த நிறுவனங்கள் கம்பெனி பதிவாளரிடம் (டெல்லி, அரியானா) கம்பெனிகள் சட்டம் 2013 பிரிவு 380ன் கீழ் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பதிவுச் சான்றிதழ் பெற வேண்டும் என எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.

The post இந்தியாவில் இருந்து வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறுவது ஏன்? மக்களவையில் கனிமொழி எம்.பி கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: