நாடாளுமன்ற துளிகள்…

* பதவி உயர்வில் ஓபிசி இடஒதுக்கீடு
பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தினருக்கு அவர்களது மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கவும் சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலும் அரசியல் சட்டத்தின் 7வது அட்டவணை, 69வது பிரிவில் திருத்தம் மேற்கொள்வதற்கு திமுக எம்பி பி.வில்சன் தனிநபர் மசோதா ஒன்றை மாநிலங்களவையில் நேற்று அறிமுகம் செய்துள்ளார். இது தவிர, ஒன்றிய அரசு உயர் பதவிகளில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு போதுமான பிரதிநிதித்துவம் இல்லை.இதை கருத்தில் கொண்டு, ஒன்றிய அரசு பணிகளில் பதவி மூப்பு அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்கு பதவி உயர்வு அளிப்பதற்கு அரசியல் சட்டத்தின் 16வது பிரிவில் திருத்தம் மேற்கொள்வதற்கான தனி நபர் மசோதா ஒன்றையும் வில்சன் எம்பி கொண்டு வந்துள்ளார்.

* பொய் குற்றச்சாட்டுகள் கூறும் எம்பி.க்கள் மீது நடவடிக்கை
மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாகேத் கோகலே பிரதம மந்திரி கரீப் கல்யாண் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட பருப்பு மற்றும் பிற தானியங்கள் குறித்து கேள்வி எழுப்பினார். மார்க்சிஸ்ட் எம்பி ஜான் பிரிட்டாஸ் பயணிகளை ஏமாற்றுவதற்காக பிரீமியம் தட்கல் கொண்டுவரப்பட்டுள்ளது. பொது பெட்டிகள் மற்றும் ஸ்லீப்பர் பெட்டிகள் ஏசி பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளன.இது பற்றி ரயில்வே அமைச்சர் மறு ஆய்வு செய்வாரா என்று கேட்டார். இரண்டு எம்பி.க்களின் குற்றச்சாட்டு பொய்யானது. கேள்வி என்ற பெயரில் பரபரப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த செயல் அமைந்துள்ளது. இது போல் போலி குற்றச்சாட்டுகளை கூறும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவை தலைவர் ஜெகதீப் தன்கருக்கு கோரிக்கை விடுத்தனர்.

* ரயில் கட்டணத்துக்கு கமிட்டி
பண்டிகை காலங்களின் போது ரயில் கட்டணங்களில் 300 சதவீத அதிகரிக்கப்பட்டு வருகிறது. எனவே, ரயில் கட்டணத்தை நிர்ணயிக்க கமிட்டி அமைக்கப்படுமா? என திமுக எம்பி பி.வில்சன் மாநிலங்களவையில் கேள்வி கேட்டார். அதற்கு ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்து பதிலில், பண்டிகை காலத்தின்போது பயணிகள் அதிக கட்டணம் செலுத்த வேண்டும். இதற்காக கமிட்டி அமைக்கும் திட்டம் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

* வக்ஃபு சட்டத்துக்கு எதிராக மசோதா
கடந்த 1995ம் ஆண்டைய வக்ஃபு சட்டத்தை ரத்து செய்ய கோரி பாஜ எம்பி ஹர்நாத் சிங் யாதவ் கொண்டு வந்த தனி நபர் மசோதா மாநிலங்களவையில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. காங்கிரஸ், திமுக,மார்க்சிஸ்ட்,இந்திய கம்யூனிஸ்ட்,ஆர்ஜேடி கட்சிகள் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 53 உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.32 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த மசோதா விரைவில் விவாதத்துக்கு வருகிறது.

* கடற்படையில் 10 ஆயிரம் காலி பணியிடம்
கடற்படையில் மொத்தம் 10,896 பணியிடங்கள் காலியாக உள்ளன என்று மக்களவையில் பாதுகாப்பு துறை இணை அமைச்சர் அஜய் பட் தெரிவித்தார். கேள்வி ஒன்றுக்கு அவர் பதிலளிக்கையில்,‘‘ படையில் 9,119 மாலுமி பதவிகளும், 1777 அதிகாரிகள் பதவிகளும் காலியாக உள்ளன. கடற்படைக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரிகள் பணியிடம் 11,979,மாலுமிகள் பணியிடம் 76,649. கடந்த 2021ல் 323 அதிகாரிகளும்,2022ல் 386 அதிகாரிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.2021ல் 5,547 மாலுமிகளும்,2022ல் 5171 மாலுமிகளும் பதவிகளும் நிரப்பப்பட்டுள்ளன’’ என்றார்.

The post நாடாளுமன்ற துளிகள்… appeared first on Dinakaran.

Related Stories: