வழக்கமாக முதல்வர் தேர்வில் இழுத்தடிக்கும் காங்கிரஸ் கட்சி, தெலங்கானாவில் வெற்றி பெற்றதும் புதிய முதல்வராக ரேவந்த் ரெட்டியை அறிவித்து, அவர் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். ஆனால் எப்போதும் முந்தும் பா.ஜ இப்போது புதிய முதல்வர் தேர்வு பற்றி வாய் திறக்கவில்லை. இந்த நிலையில் புதிய முதல்வர்களை தேர்வு செய்யும் பா.ஜ மேலிட பார்வையாளர்கள் பெயர்கள் இன்று அறிவிக்கப்படலாம் என்று மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
மேலிட பார்வையாளர்கள் அந்தந்த மாநிலங்களுக்கு சென்று புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் கூட்டத்தை நடத்துவார்கள். அந்த கூட்டத்தில் மபி, சட்டீஸ்கர், ராஜஸ்தான் மாநிலத்திற்கான புதிய முதல்வர்கள் பெயர்கள் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. இதற்கிடையே புதிய முதல்வர்கள் தேர்வு குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பா.ஜ தலைவர் ஜேபி நட்டா ஆகியோருடன் 3 மாநில மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.
ராஜஸ்தான் பா.ஜ எம்எல்ஏக்கள் கடத்தல்?
ராஜஸ்தான் முதல்வர் பதவிக்கு முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, மாநில பா.ஜ தலைவர் சிபி ஜோஷி, ஒன்றிய அமைச்சர்கள் கஜேந்திரசிங் ஷெகாவத், அர்ஜுன்ராம் மேக்வால் உள்ளிட்டோர் போட்டியில் உள்ளனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட 60க்கும் மேற்பட்ட பா.ஜ எம்எல்ஏக்கள் வசந்தராவை சந்தித்து ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
அவர்கள் அனைவரும் குழுவாக தனித்தனியாக பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜெய்ப்பூர் புறநகரில் உள்ள ரிசார்ட்டில் 5 எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கிஷன்கஞ்ச் எம்.எல்.ஏ லலித் மீனாவின் தந்தை ஹேம்ராஜ் மீனா இதுபற்றி தெரிவித்தார். அவரது மகனுடன் மேலும் 4 பேர் அந்த ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
The post மபி, சட்டீஸ்கர், ராஜஸ்தானில் புதிய முதல்வர்கள் தேர்வுக்கு மேலிட பார்வையாளர்கள்: பா.ஜ இன்று அறிவிக்கிறது appeared first on Dinakaran.