காங்கிரஸ், மற்ற கட்சிகளை விட ஆட்சி நடத்த மக்களுக்கு விருப்பமான கட்சி பா.ஜ: நாடாளுமன்ற கட்சிக்கூட்டத்தில் பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளை விட ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதில் பாஜ சிறந்து விளங்குவதால், ஆட்சிக்கான மக்களின் விருப்பமான தேர்வாக பாஜ மாறியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். மபி, சட்டீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ அமோக வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து பா.ஜ நாடாளுமன்ற கட்சிக்கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ பெற்ற மாபெரும் வெற்றிக்கு எந்தத் தலைவரும் காரணம் இல்லை. அணி உணர்விற்கு தான் அந்த பெருமை சென்று சேரும். பா.ஜ மூன்று மாநிலங்களில் வெற்றி பெற்றதோடு, தெலங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களிலும் அது பலம் பெற்றுள்ளது. இனிமேல் மக்களுடன் பா.ஜவினர் உரையாடும் போது, அவர்கள் விரும்பும் மொழியைப் பயன்படுத்த வேண்டும். மோடி ஜி தரும் வாக்குறுதி என்பதற்குப் பதிலாக மோடி தரும் வாக்குறுதி என்று பயன்படுத்த வேண்டும். ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்தபோது மாநிலங்களில் காங்கிரஸ் 40 முறை சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொண்டுள்ளது.

அதில் 7ல் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. இது 18 சதவீத வெற்றி. ஆனால் பா.ஜ ஆட்சியில் இருந்த போது நடந்த 39 சட்டப்பேரவை தேர்தல்களில் 22 முறை வெற்றியை பெற்றுள்ளது. இது 56 சதவீத வெற்றி. மாநில கட்சிகள் கூட காங்கிரசை விட மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ளன. அவர்கள் ஆட்சியில் இருந்த போது 36 முறை எதிர்கொண்ட தேர்தலில் 18 முறை வெற்றியை பெற்றுள்ளனர். இது 50 சதவீதம் ஆகும். இந்த கணக்குகளை பார்க்கும் போது ஆட்சியை நடத்துவதற்கு மக்களுக்கு விருப்பமான கட்சி பா.ஜ என்பதை இது காட்டுகிறது.

ஒரு மாநிலத்தில் இரண்டு முறை ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சி சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொண்டால், காங்கிரஸின் வெற்றி விகிதம் 14 சதவீதம். ஆனால் பாஜ வெற்றி 59 சதவீதம். இவ்வாறு அவர் பேசினார். பா.ஜ. நாடாளுமன்ற கட்சிக்கூட்டத்தில், பா.ஜ. தேசிய தலைவர் ஜே.பி., நட்டா உள்ளிட்ட மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் மோடி அவைக்கு வரும் போது கோஷம் எழுப்பி, கைதட்டி வரவேற்றனர்.

* மாநிலங்களவையில் மோடிக்கு வாழ்த்து
பிரதமர் மோடி வழக்கமாக மாநிலங்களவையில் வியாழன் தோறும் நடக்கும் கேள்வி நேரத்தில் பங்கேற்பார். நேற்று அவர் அவைக்கு வந்த ேபாது ஆளும்கட்சி எம்பிக்கள் எழுந்து நின்று வாழ்த்து கோஷம் எழுப்பி அவரை வரவேற்றனர்.

The post காங்கிரஸ், மற்ற கட்சிகளை விட ஆட்சி நடத்த மக்களுக்கு விருப்பமான கட்சி பா.ஜ: நாடாளுமன்ற கட்சிக்கூட்டத்தில் பிரதமர் மோடி பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: