நீலகிரியில் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க செயற்கை குளங்கள்


ஊட்டி: தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க செயற்கை குளம், கிணறுகள் அமைத்து காய்கறி பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.நீலகிரி மாவட்டம் மலை பாங்கான பகுதிகளை கொண்டது. இந்த மலைப்பாங்கான பகுதிகளிலும், பள்ளத்தாக்கு பகுதிகளிலும் விவசாயம் செய்யப்படுகிறது. இங்கு பெரும்பாலும் பருவ மழை நம்பி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் முதல் 2 மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும்.

இதைத் தொடர்ந்து, அக்டோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வடகிழக்கு பருவ மழையும் பெய்யும். அதன்பின், 6 மாதங்கள் மழை பெய்யாது. இது போன்ற சமயங்களில் மலைப்பாங்கான பகுதிகளில் போதிய தண்ணீர் இன்றி விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. து போன்ற சமயங்களில் சில விவசாயிகள் லாரிகளில் தண்ணீர் வாங்கி அவைகளை சேமித்து வைத்து பயிர்களுக்கு பாய்ச்ச வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். சாதாரண கிணறுகளில் தண்ணீர் சேமித்து வைக்க முடிவதில்லை. காரணம் கிணற்றில் உள்ள தண்ணீர் நிலத்திற்குள் சென்று விடுகிறது. இதனை கட்டுப்படுத்தவும் அதே சமயம் தண்ணீரை சேமித்து வைக்கவும், நிலத்திற்குள் செல்லாமல் இருக்க விவசாயிகள் செயற்கை குளங்களை அமைத்துக் கொள்கின்றனர்.

விவசாய நிலங்களுக்கு நடுவே பிளாஸ்டிக் பேப்பர்களை கொண்டு கிணறுகளை சுற்றிலும் வைத்து மூடி விடுகின்றனர். இதனால், சேமித்து வைக்கப்படும் தண்ணீர் மற்றும் லாரிகளில் வாங்கும் தண்ணீர் சிறிதளவும் வீணாகாமல் பயிர்களுக்கு பாய்ச்ச பயன்படுகிறது. முத்தோரை பாலாடா, கேத்தி பாலாடா, தேனாடுகம்பை, காவிலோரை, அணிக்கொரை போன்ற பகுதியில் விவசாய நிலங்களில் பிளாஸ்டிக் செயற்கை குளங்கள், கிணறுகள் அமைக்கப்பட்டு பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இம்முறை எதிர்பார்த்த அளவிற்கு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை பெய்யாததால், அனைத்து பகுதிகளிலும் தற்போது பிளாஸ்டிக் குளங்கள், கிணறுகள் அமைத்து தண்ணீர் சேமிக்கப்படுகிறது. இதன் காரணமாக விவசாயிகளுக்கு தண்ணீர் பிரச்னை குறைந்துள்ளது.

The post நீலகிரியில் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க செயற்கை குளங்கள் appeared first on Dinakaran.

Related Stories: