இந்த கூட்டணிக்கு இந்தியா என்ற பெயரும் சூட்டப்பட்டது. இக்கூட்டணியின் சார்பில் 3 கூட்டங்கள் நடந்தன. இதனிடையே தெலங்கானா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில பேரவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் ‘இந்தியா’ கூட்டணியின் அடுத்த கூட்டம் நடைபெறவில்லை. தெலங்கானாவில் காங்கிரசும், மத்தியபிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் பாஜவும் ஆட்சியை கைப்பற்றி உள்ளன.
இந்நிலையில் ‘இந்தியா’ கூட்டணியின் 4வது ஆலோசனை கூட்டம் நாளை டிச.6) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியாது என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
இதுபற்றி அவர் கூறுகையில்,’ இந்தியா கூட்டணி சந்திப்பு தேதி பற்றி எனக்குத் தெரியாது. எனக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்தால் நான் எனது பயணத் திட்டத்தை மாற்றியிருப்பேன்.
நான் டிசம்பர் 6 முதல் டிசம்பர் 11 வரை மேற்கு வங்கத்தின் வடக்கு பகுதிக்கு செல்கிறேன். டிசம்பர் 6ம் தேதி சந்திப்பு தேதி பற்றி முன்பே தெரிந்திருந்தால், எனது பயணத்தை நான் மாற்றியமைத்திருக்கலாம்’ என்றார். இந்தியா கூட்டணி கூட்டத்தில் திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த வேறு எந்தத் தலைவர்களும் பங்கேற்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
தேர்தல் முடிவுகளால் ஏமாற்றம் இல்லை
மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத தேர்தலில் தனித்து போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சி படுதோல்வி அடைந்தது. இதுகுறித்து சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில்,’பாஜ போன்ற ஒரு பெரிய கட்சியை எதிர்த்துப் போராட நிறைய தயாரிப்புகளைச் செய்ய வேண்டும். அந்த போராட்டம் பெரியது.
அவர்கள் பெரும்பான்மையைப் பெறும் வியூகத்தை எதிர்த்துப் போராட வேண்டும். அப்படி செய்யும் போது உரிய முடிவுகள் வரும் என்று நம்புகிறேன். எதிர்காலத்தில் முடிவுகள் வித்தியாசமாக இருக்கும். இந்த முடிவுகளால் நாங்கள் ஏமாற்றம் அடையவில்லை. அரசியலில் இது போன்ற முடிவுகள் வரும். மக்களவைத் தேர்தலில் வாரணாசியில் பாஜ ஐந்து லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்று வைத்துக்கொள்வோம். அதற்காக பாஜவால் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்று அர்த்தமல்ல.இன்னும் நிறைய பேர் ஏமாற்றமடைந்து, நம்பிக்கை சிதைந்த நிலையில் உள்ளனர்’ என்று கூறினார்.
மக்களவை தேர்தலில் பா.ஜ வெற்றி பெறாது: மம்தா
2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக தொகுதிப் பங்கீடு குறித்து முறையான ஒருமித்த கருத்து ஏற்பட்டால், பா.ஜவால் ஒன்றியத்தில் ஆட்சியைத் தக்கவைக்க முடியாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,’ராஜஸ்தான், சட்டீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல்களில் பாஜ வெற்றி பெற்றுள்ளது. ஆனால் வாக்கு வித்தியாசம் குறைவாக இருப்பதால் பா.ஜ மகிழ்ச்சியடைய ஒன்றுமில்லை. மக்களவை தேர்தலுக்கு ஒரு வியூகம் இறுதி செய்யப்பட வேண்டும். அதன் அடிப்படையில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டால் பாஜ ஆட்சிக்கு வராது என்று நான் நினைக்கிறேன்’ என்று அவர் கூறினார்.
The post டெல்லியில் நாளை நடக்கிறது இந்தியா கூட்டணி ஆலோசனை; மம்தா பானர்ஜி புறக்கணிக்கிறார் appeared first on Dinakaran.
