சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி; நாடாளுமன்றத்தில் விரக்தியை வெளிப்படுத்த வேண்டாம்: எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு

புதுடெல்லி: சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியால் ஏற்பட்ட விரக்தியை நாடாளுமன்றத்திற்குள் வெளிப்படுத்த வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சிகளை கேட்டுக் கொண்டார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடருக்கு முன்னதாக நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: இந்த கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகளுக்கு பொன்னான வாய்ப்பு. நாடு எதிர்மறையை நிராகரித்துவிட்டது.

அமர்வின் தொடக்கத்தில் எதிர்க்கட்சி நண்பர்களுடன் நாங்கள் எப்போதும் உரையாடுவோம். நாங்கள் எப்போதும் அனைவரின் ஒத்துழைப்பையும் நாடுகிறோம். இந்த முறையும் இதுபோன்ற அனைத்து செயல்முறைகளும் முடிக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் கோவில். இங்கு மக்களின் அபிலாஷைகளுக்கும், வளர்ந்த இந்தியாவின் அடித்தளத்தை வலுப்படுத்துவதற்கும் மிக முக்கியமான தளமாகும். அனைத்து உறுப்பினர்களும் நன்கு தயாராகி, மசோதாக்கள் மீது முழுமையான விவாதங்களை நடத்த வேண்டும். ஆனால், விவாதம் நடைபெறவில்லை என்றால், அந்த விஷயங்களை நாடு தவறவிடும்.

சட்டசபைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் நான் பேசினால், எதிர்க்கட்சி நண்பர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு. தோல்வியால் விரக்தியை வெளிப்படுத்தும் திட்டங்களைத் தீட்டாமல், கடந்த ஒன்பது ஆண்டுகால எதிர்மறைப் பழக்கத்தை விட்டுவிட்டு இந்தத் தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த அமர்வில் அவர்கள் நேர்மறையாக முன்னோக்கிச் சென்றால், நாடு அவர்களை நோக்கிய கண்ணோட்டத்தை மாற்றும்.

அவர்களுக்கு ஒரு புதிய கதவு திறக்கப்படலாம். அவர்கள் எதிர்க்கட்சி வரிசையில் உள்ளனர். ஆனால் நான் அவர்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்குகிறேன். எதிர்கட்சிகள் நேர்மறையான எண்ணத்துடன் முன்வர வேண்டும். அனைவரின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. நம்பிக்கையை இழக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் நாடாளுமன்றத்திற்கு வெளியே ஏற்பட்ட தோல்விகளின் விரக்தியை தயவு செய்து நாடாளுமன்றத்திற்கு உள்ளே வெளிப்படுத்தாதீர்கள். விரக்தியும் ஏமாற்றமும் இருக்கும். அதற்காக ஜனநாயக கோயிலில் இதை வெளிக்காட்ட வேண்டாம்.

எனது அனுபவத்தின் அடிப்படையில் சொல்கிறேன். உங்கள் எதிர்ப்பு குணத்தை சற்று மாற்றிக் கொள்ளுங்கள். எதிர்ப்பதற்காக எதிர்க்கும் பழக்கத்தை விட்டுவிடுங்கள். நாட்டு நலன் கருதி ஆக்கபூர்வமான விஷயங்களை ஆதரிக்கவும், குறைகளை கூற விவாதிக்கவும் செய்ய வேண்டும். இதுபோன்ற விஷயங்களில் மக்களிடையே உள்ள வெறுப்பு, காதலாக மாறுவதைப் பார்ப்போம்.

சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் இதுவே உணர்வு. இந்த உணர்வுக்கு மதிப்பளித்து, அனைத்து உறுப்பினர்களும் நாடாளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும், இது அவர்களுக்கு எனது வேண்டுகோள். நான்கு மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வந்துள்ளன. முடிவுகள் மிகவும் உற்சாகமாக உள்ளன. நாட்டின் பிரகாசமான எதிர்காலத்திற்காக அர்ப்பணிப்புடன் இருக்கும் நாட்டின் சாமானியர்களின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுபவர்களுக்கு இவை ஊக்கமளிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

தபால் அலுவலக சட்ட திருத்த மசோதா நிறைவேறியது
மாநிலங்களவையில் 125 ஆண்டுகள் பழமையான இந்திய தபால் அலுவலக சட்டத்தை திருத்தும் அஞ்சல் அலுவலக மசோதா நிறைவேற்றப்பட்டது. அவையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா சட்டத்தின்படி, ‘மாநிலத்தின் பாதுகாப்பு, வெளி மாநிலங்களுடனான நட்புறவு, பொது ஒழுங்கு, அவசரநிலை அல்லது பொதுப் பாதுகாப்பு போன்றவற்றின் நலன்களுக்காக தபாலில் அனுப்பப்படும் எந்தவொரு பொருளையும் இடைமறிக்கவோ, திறக்கவோ அல்லது தடுத்து வைக்கவோ மத்திய அரசு, அறிவிப்பின் மூலம் எந்த அதிகாரிக்கும் அதிகாரம் அளிக்கலாம்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது.

The post சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி; நாடாளுமன்றத்தில் விரக்தியை வெளிப்படுத்த வேண்டாம்: எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: