மழைநீர் தேங்கிய சாலைகளில் தற்போது போக்குவரத்து சீராகி வருகிறது: சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: மழைநீர் தேங்கிய சாலைகளில் தற்போது போக்குவரத்து சீராகி வருகிறது என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயல் நெருங்கி வருவதால் 20 மணி நேரத்துக்கும் மேல் தொடர்ந்து கொட்டி தீர்க்கும் கனமழையால் தலைநகர் சென்னை தீவாக மாறி உள்ளது. திரும்பிய பக்கமெல்லாம் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிப்பதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு நகரமே ஸ்தம்பித்து உள்ளது. ரயில், பஸ் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடைகள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; கனமழையால் சென்னையில் 11 சுரங்கபாதைகள் மூடப்பட்டுள்ளன. பாதுகாப்பு கருதி சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. மழைநீர் வடிகால்கள், தற்போது மழை நீரை உள்வாங்க தொடங்கியுள்ளன. சென்னை, பெருங்குடியில் 50 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கால்வாய்களில் இருந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்டவற்றில் தண்ணீர் வெளியேறி வருவது மகிழ்ச்சியான செய்தி. தண்ணீர் தேக்கம், முதியோர்கள் தரைத்தளத்தில் இருப்பது குறித்த புகார்கள்தான் வந்துள்ளன.

நள்ளிரவில் சாலைகளில் இருக்கும் தண்ணீர் வடிந்துவிடும்; மற்றவை மோட்டார் மூலம் வெளியேற்றிவிடுவோம். சென்னையில் மீட்புப்பணி மேற்கொள்ள மற்ற மாவட்டங்களில் இருந்து 5,000 பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இரவு 12 மணிக்கு மேல் மழை குறைய வாய்ப்பு உள்ளது என பாலச்சந்திரன் கூறியுள்ளார். வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரனுடன் தொடர்பில் இருக்கிறோம் இவ்வாறு கூறினார்.

The post மழைநீர் தேங்கிய சாலைகளில் தற்போது போக்குவரத்து சீராகி வருகிறது: சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: