மிக்ஜாம் புயல்: சென்னையில் விடிய விடிய கனமழை; புறநகர் ரயில்கள் காலை 8மணி வரை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னை: மிக்ஜாம் புயல் கரையை நெருங்கி வரும் நிலையில், சென்னை முழுவதும் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. நேற்றிரவு முதல் பெய்த தொடர் மழையின் காரணமாக பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக வளசரவாக்கத்தில் 17.16 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. எண்ணூர் துறைமுகத்தில் அதிகபட்சமாக 75 கிலோமீட்டர் வேகத்திலும், மீனம்பாக்கம் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 40 கிலோமீட்டர் வேகத்திலும் காற்றின் அளவு பதிவாகி உள்ளது. கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் இதுவரை 14 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன. கனமழையின் காரணமாக 15 இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன.

சென்னையில் விடிய விடிய பெய்த மழையின் காரணமாக பேசின் பிரிட்ஜ் -வியாசர்பாடி இடையே உள்ள பாலத்தில் அபாய கட்டத்தை தாண்டி தண்ணீர் செல்வதால் ரயில்கள் ரத்து செய்யபட்டுள்ளது. சென்னையில் இருந்து மைசூர், கோவை, பெங்களூரு, திருப்பதி செல்லும் 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யபட்டுள்ளது. சென்னை-மைசூரு சதாப்தி, சென்னை-கோவை விரைவு, சென்னை-கோவை சதாப்தி, சென்னை-பெங்களூரு ஏசி டபுள் டக்கர், சென்னை-பெங்களூரு பிருந்தாவன், சென்னை-திருப்பதி சப்தகிரி ஆகிய ரயில்கள் ரத்து செய்யபடுவதாக தெற்கு ரயில் வே தெரிவித்துள்ளது.

சென்னைக்கு 150 கி.மீ. தொலைவில் கிழக்கு-தென்கிழக்கில் மிக்ஜாம் புயல் மையம் கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் நகர்கிறது. முன்னதாக 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிலையில் தற்போது வேகம் சற்று அதிகரித்துள்ளது. புயலின் தாக்கம் காரணமாக சென்னை கடற்கரை முதல் தாம்பரம், செங்கல்பட்டு வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யபட்டுள்ளது.

The post மிக்ஜாம் புயல்: சென்னையில் விடிய விடிய கனமழை; புறநகர் ரயில்கள் காலை 8மணி வரை தற்காலிகமாக நிறுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: