நாகாலாந்து இடைத்தேர்தல் ஆளும்கட்சி அமோக வெற்றி: காங்கிரஸ் தோல்வி

கோஹிமா: நாகாலாந்தில் தாபி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஆளும்கட்சி அமோக வெற்றி பெற்றது. காங்கிரஸ் தோல்வி அடைந்தது. நாகாலாந்து மாநிலத்தில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக நெய்பியூ ரியோ உள்ளார். அங்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி தாபி தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஆளும்கட்சியை சேர்ந்த நோக் வாங்கனவோ காலமானார். அவர் இந்த தொகுதியில் தொடர்ந்து 10 முறை வெற்றி பெற்று இருந்தார்.

இதையடுத்து அங்கு நவ.7ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. ஆளும் கட்சி சார்பில் வாங்பாங் கொன்யாக்கும், காங்கிரஸ் சார்பில் வாங்லெம் கொன்யாக் ஆகியோர் மட்டும் போட்டியிட்டனர். 96.25 சதவீத வாக்குள் பதிவாகி இருந்தன. நேற்று இந்த வாக்குகள் எண்ணப்பட்டன.

இதில் ஆளும்கட்சி வேட்பாளர் வாங்பாங் கொன்யாக் 10,053 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் வாங்லெம் கொன்யாக் 4,720 வாக்குகளும் பெற்றனர். இதனால் 5,333 வாக்குகள் வித்தியாசத்தில் ஆளும்கட்சி வேட்பாளர் வாங்பாங் கொன்யாக் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

The post நாகாலாந்து இடைத்தேர்தல் ஆளும்கட்சி அமோக வெற்றி: காங்கிரஸ் தோல்வி appeared first on Dinakaran.

Related Stories: