வரி ஏய்ப்பு வழக்கிலிருந்து விடுவிக்க லஞ்சம் கேட்டு ஆசிரியரை மிரட்டும் சிபிஐ அதிகாரி: அமலாக்கத்துறை பிரச்னை ஓய்வதற்குள் அடுத்த சர்ச்சை

ராமநாதபுரம்: வரி ஏய்ப்பு வழக்கில் இருந்து விடுவிக்க முதுகுளத்தூர் ஆசிரியரிடம் ₹7 லட்சம் லஞ்சம் கேட்டு பேரம் பேசும் சிபிஐ அதிகாரி பற்றிய வீடியோ வைரலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒன்றிய புலனாய்வு அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை, ஐடி ஆகிய துறைகள் அமைச்சர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர் மீது வழக்குகள் பதிந்து அவர்களை விசாரணைக்கு அளித்து, வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டுமென்றால் கோடிக்கணக்கில் மற்றும் லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதை உறுதிப்படுத்தும் வகையில், டெல்லி, அகமதாபாத், ராஜஸ்தானில் வழக்குகளில் சிக்கியவர்களிடம் இருந்து லஞ்சம் வாங்கியதாக அடுத்தடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். கடந்த 1ம் தேதி திண்டுகல்லில் அரசு டாக்டரிடம் ₹20 லட்சம் லஞ்சம் வாங்கிய மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். அவரிடம் 15 மணி நேரம் நடத்திய விசாரணையில், மேலும் பலரை மிரட்டி கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கியதும், சென்னை உள்ளிட்ட அலுவலகங்களில் பணியாற்றிய அதிகாரிகளுக்கு பங்கு கொடுத்ததும் தெரியவந்தது.

இதையடுத்து மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியது. இதற்கிடையே, அமலாக்கத்துறை தன்னையும் மிரட்டியதாக சபாநாயகர் அப்பாவு அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சர்ச்சை ஓய்வதற்குள் ஆசிரியர் ஒருவரை சிபிஐ அதிகாரி மிரட்டி லஞ்ச கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதன் விவரம் வருமாறு:
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகேயுள்ள செம்பொன்குடியை சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரன். பரமக்குடி அருகே கீழாம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, கடந்த 2022 செப். 5ல் குடியரசு தலைவரிடம் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றார். ஆசிரியர் ராமச்சந்திரனின் சகோதரர் பஞ்சாட்சரம், மதுரை, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தின் மூலம், வருமானத்தை குறைவாக காண்பித்து, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் நோக்கில் வரி ஏய்ப்பு செய்ததாக கடந்த 2021ம் ஆண்டு புகார்கள் வந்தன. அதன் பேரில் சிபிஐ போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்தாண்டு பஞ்சாட்சரத்தை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளி வந்தார்.

இவ்வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. விசாரணையில் பஞ்சாட்சரத்தின் தம்பி ஆசிரியர் ராமச்சந்திரன் வங்கி கணக்கிற்கு, பஞ்சாட்சரம் நிறுவனத்தில் இருந்து ₹12 லட்சம் வரை முறைகேடாக பணப் பரிமாற்றம் செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள், ராமச்சந்திரனிடம் விசாரித்தனர். பின்னர் அவர் மீது கூட்டுச்சதி, மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை சிபிஐ போலீசார் கடந்த பிப். 24ம் தேதி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து ராமச்சந்திரன் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு, துறை ரீதியான நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் வரி ஏய்ப்பு புகாரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு மதுரையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கிலிருந்து விடுவிப்பதற்காக மதுரையில் சிபிஐ அலுவலகம் அருகே சிபிஐ அதிகாரி தினேஷ் என்பவர் ஆசிரியர் ராமச்சந்திரனிடம் ₹7 லட்சம் லஞ்சமாக கேட்டு இந்தியில் பேசுவதாக 40 நிமிட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த வீடியோவில், சிபிஐ அதிகாரி இந்தியில் பேச, அதனை ஒருவர் தமிழில் மொழி பெயர்த்து பேரம் பேசுகிறார். அதற்கு ஆசிரியர் ராமச்சந்திரன், தற்போது என்னால் ₹7 லட்சம் தர முடியாது. ₹2 லட்சம் முன் பணமாக தருவதாகவும், பின்னர் ₹5 லட்சம் தருவதாகவும் கூறுகிறார். இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ டிஎஸ்பியிடம் ஒரு வார்த்தை பேசிக் கொள்ளுங்கள் என்றும் மொழிப் பெயர்ப்பாளர் கூறுகிறார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சிபிஐ மிரட்டலால் விருப்பு ஓய்வில் சென்ற பெண் கல்வி அதிகாரி
ஆசிரியர் ராமச்சந்திரன் கூறுகையில், ‘நான் பணபுரியும் போகலூர் ஒன்றிய பள்ளியின் வட்டார கல்வி அலுவலர், கண்காணிப்பாளர், உதவியாளர் ஆகிய 3 பெண் அலுவலர்களை கடந்த மே 10ம் தேதி மதுரை சிபிஐ அலுவலகத்திற்கு வரச்சொல்லி என் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க நிர்பந்தித்து மிரட்டியுள்ளனர். இதனால் மனம் உளைச்சல் அடைந்த அந்த பெண் அதிகாரி கட்டாய விருப்ப ஓய்வு பெற்று சென்று விட்டார். இதுபோன்று பரமக்குடி கல்வி மாவட்ட அதிகாரியையும் என்னை டிஸ்மிஸ் செய்ய சொல்லி மிரட்டியுள்ளனர்’ என்றார்.

மொழிபெயர்ப்புக்கு ஆள் வைத்து பேரம் பேசுகிறார்:- ஆசிரியர் பரபரப்பு பேட்டி
ஆசிரியர் ராமச்சந்திரன் நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி: ஆசிரியராக பணியாற்றிய நான் 2022ம் ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து ஒரே நபராக தேர்ந்தெடுக்கப்பட்டு தேசிய நல்லாசிரியர் விருது பெற்றிருந்தேன். எனது சகோதரர் பஞ்சாட்சரம் மீது இருந்த வருமான வரி ரீபென்ட் வழக்கில் எனது பெயரை சேர்த்து விட்டனர். இதன் பிறகு நான் கைது செய்யப்பட்டு, நிபந்தனை ஜாமீன் கையெழுத்து போடுவதற்காக மதுரையிலுள்ள சிபிஐ அலுவலகத்திற்கு சென்றேன். 2023, ஜூன் கடைசி வாரத்தில் கையெழுத்து இடச் சென்ற போது சிபிஐ அலுவலகத்தில் இருந்த தினேஷ் என்ற அதிகாரி… (அவர் பெயர் அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. ஆனால் அவர் என்னிடம் கையெழுத்து வாங்கும் போது தினேஷ் என தெரிந்து கொண்டேன்) நான் அந்த அலுவலகத்திற்குள் முதல் நாள் கையெழுத்து இடச் சென்றதும், என்னை கண்ணால் சைகை காட்டி தனியாக அழைத்து சென்றார்.

வெளியே உள்ள ஆத்திகுளம் பெட்டிக்கடை ஒன்றிற்கு அழைத்து சென்றார். அவருக்கு தமிழ் தெரியாது. இந்தியில் பேசினார். அங்கிருந்த பெட்டிக்கடைகாரர் என்னிடம் மொழி பெயர்த்தார். தினேஷ் என்ற அதிகாரி இந்தியில் சொல்ல, அதை பெட்டிக்கடைக்காரர் என்னிடம் மொழிபெயர்த்து, ‘‘எப்ஐஆர் போடப்பட்டு குற்றப்பத்திரிகையில் உனது பெயர் உள்ளது. நீதிமன்றத்தில் அந்த ஆவணங்களை வாங்கி குற்றப்பத்திரிகை இறுதி அறிக்கையில் இருந்து உனது பெயரை நீக்கி விடுகிறோம். அதற்கு, உயர் அதிகாரிகளுக்கு பணம் கொடுக்கவேண்டும். அதற்கு ₹7 லட்சம் தரவேண்டும். அதனை ஜூன் 30ம் தேதிக்குள் தரவேண்டும். ₹7 லட்சம் தந்தால், இந்த வழக்கிலிருந்து விடுவிக்கிறேன். முதற்கட்டமாக ₹2 லட்சமும், பிறகு குற்றப்பத்திரிகையில் இருந்து பெயரை நீக்கிய பிறகு ₹5 லட்சம் தந்தால் போதும்’’ என அதிகாரி சொல்லியதை மொழிபெயர்த்து என்னிடம் பேரம் பேசினார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக என்னை உயர் அதிகாரியிடம் பேச அழைத்து செல்வதாகவும் கூறினார். நான் அலுவலகம் சென்றதும், எனது சட்டைப் பையிலிருந்து மொபைலை எடுத்து சோதனை பண்ணுவார். நான் வாய்ஸ் ரெக்கார்ட், வீடியோ ரெக்கார்ட் ஏதும் போட்டுள்ளேனா என சோதனை செய்வார்.

நான் மொபைலின் வெளிச்சத்தை குறைத்து விட்டு செல்போனின் முன்பக்க கேமராவை ஆன் செய்து ரெக்கார்ட் செய்துவிட்டேன். மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக நான் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, துறைரீதியான நடவடிக்கைக்கு ஆளாகி வருகிறேன். தற்போது லஞ்ச புகாரின் பேரில் மதுரையில் அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த நடவடிக்கை எனக்கு புதிய நம்பிக்கை அளித்துள்ளது. அரசு எனக்கு உரிய பாதுகாப்பு வழங்கும் என்ற நம்பிக்கையில் வீடியோ வெளியிட்டேன்.

பணம் கேட்டு பேரம் பேசும்போது, ‘‘உங்களை நம்பி நான் எப்படி பணம் எப்படி தருவது? அதிகாரிகள் மாறிச் சென்றால் நான் என்ன பண்ணுவது’’ என கேட்டேன். அதற்கு அவர், ‘‘உயர் அதிகாரிகள் நேரடியாக பணம் கேட்க மாட்டார்கள்’’ எனக் கூறி, என் வழக்கின் விசாரணை அதிகாரியிடம் பேசியதாக அவர் போனிலிருந்து என் முன்னே இரண்டு முறை பேசி காட்டினார். அப்போது இந்த வழக்கிலிருந்து எனது பெயரை நீக்கி விடுவதாக அவருடன் போனில் பேசியவரும் கூறினார். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post வரி ஏய்ப்பு வழக்கிலிருந்து விடுவிக்க லஞ்சம் கேட்டு ஆசிரியரை மிரட்டும் சிபிஐ அதிகாரி: அமலாக்கத்துறை பிரச்னை ஓய்வதற்குள் அடுத்த சர்ச்சை appeared first on Dinakaran.

Related Stories: