வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதாலும், நிக்ஜம் புயல் உருவாகியுள்ளதாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளம் பாதித்த பகுதிகளை அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். அதனடிப்படையில், இன்று காலை 9 மணிக்கு புழல் ஏரி பகுதிக்கு பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி வருகை தந்தார். பின்னர், புழல் ஏரியில் இருந்து 2 மதகுகள் வழியாக வெளியேற்றப்படும் உபரிநீரை பார்வையிட்டு ஏரியின் கரைகளை ஆய்வு செய்தார்.
அதன்பின்னர், செங்குன்றம் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் தங்கியுள்ள தேசிய பேரிடர் மீட்பு குழு 25 பேரை சந்தித்து பேசினார். திருமணமண்டபத்தில் செங்குன்றம் தீயணைப்புத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள வெள்ள பாதுகாப்பு உபகரங்களை பார்வையிட்டு அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார். இதையடுத்து வெள்ள சேதங்களை பார்வையிடுவதற்காக காரில் அதிகாரிகளுடன் அமைச்சர் மூர்த்தி மீஞ்சூர் ஒன்றியத்துக்கு புறப்பட்டார். அங்கு மதியம் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்கிறார்.
ஆய்வின்போது, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் ராஜகுமார், நீர்வளத்துறை செயற்பொறியாளர் பொதுப்பணி திலகம், உதவி பொறியாளர் கவுரிசங்கர், புழல் வட்டார வளர்ச்சி அலுவலர் சித்ரா பெர்னாண்டோ, திமுக ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் சரவணன், பேரூராட்சி தலைவர் தமிழரசி குமார், துணை தலைவர் விப்ரநாராயணன், நிர்வாக செயல் அலுவலர் பாஸ்கரன் மற்றும் உள்ளாட்சிமன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post புழல் ஏரியை இன்று காலை அமைச்சர் மூர்த்தி ஆய்வு: தேசிய பேரிடர் மீட்பு குழுவை சந்தித்தார் appeared first on Dinakaran.
