நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் யார் என்பதுதான் முக்கியம் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் பேட்டி ஜாதி வாரிக்கணக்கெடுப்பை நடத்த வேண்டும்

வேலூர், டிச.3: ஜாதி வாரிக்கணக்கெடுப்பை நடத்த வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் யார் என்பது தான் முக்கியம் என வேலூரில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் கூறினார். வேலூரில் புதிய நீதிக்கட்சியின் வேலூர் சட்டமன்ற தொகுதியின் செயல்வீரர்கள் கூட்டம் நிர்வாகி பாலாஜி தலைமையில் நேற்று நடந்தது. இதில் கட்சியின் நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம் கலந்துகொண்டு, கட்சியில் இறந்த மூத்த நிர்வாகிகளின் படங்களை திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார். இதில் பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் யார் என்பது தான் முக்கியமே தவிர, எம்பி என்பது அல்ல. அனைத்து துறைகளிலும் ஊழல் இருக்கிறது. எல்லா துறைகளிலும் ஓரிரு கருப்பு ஆடுகள் இருக்கும். அப்படி ஒரு கருப்பு ஆடு தான் லஞ்ச ஒழிப்பு துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமலாக்கத்துறை அதிகாரி. ஒருவரால் ஒட்டுமொத்த அமலாக்க துறையையும் குறை சொல்லிவிட முடியாது.

மீண்டும் மத்தியில் மோடி தான் பிரதமராக வருவார். 5 மாநில தேர்தல்களில் இந்தியா கூட்டணியில் ஒற்றுமையில்லை. யார் பிரதமர் என கூற முடியாத நிலையில் உள்ளது. பாஜக அரசு நாட்டின் வளர்ச்சியிலும் மக்களின் நலனிலும் அக்கறையுடன் திட்டங்களை தீட்டி செயல்படுத்துகிறது. குறிப்பாக நிலவில் ராக்கெட்டை இறக்கியது, சமீபத்தில் சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்டது. தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு பல திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறது.
வடமாநிலங்கள் முழுவதும் மோடியின் பின்னால் நிற்கிறது. எனவே மீண்டும் அவரே பிரதமராவார். வட மாநிலங்களில் பிரதமர் மோடி தெய்வம் போல் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறார். வட மாநில மக்களுக்கு அயோத்தியில் உள்ள ராமர் போல பிரதமர் மோடி தென்படுகிறார். நரேந்திர மோடி மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமராவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. ஒன்றிய அரசு ஜாதி வாரிக்கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென நீதிக்கட்சியின் சார்பில் கோரிக்கை வைக்கிறோம். அது தான் எங்களின் நிலைபாடு. பாஜக தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் மதுகடையை மூடுவோம் என அறிவித்துள்ளது. கண்டிப்பாக பாஜக மதுக்கடைகளை மூடும். இவ்வாறு அவர் கூறினார்.

The post நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் யார் என்பதுதான் முக்கியம் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் பேட்டி ஜாதி வாரிக்கணக்கெடுப்பை நடத்த வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: