முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி வேலூர், காட்பாடிக்கு வருகை கலெக்டர், எம்பி, எம்எல்ஏக்கள் வரவேற்பு கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி

ேவலூர், டிச.2: கலைஞர் நூற்றாண்டுவிழாவையொட்டி வேலூர் மாவட்டத்திற்கு நேற்று வருகை தந்த முத்தமிழ் தேர் அலங்கார ஊர்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கலைஞரின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு பல்வேறு விழாக்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. கலைஞரின் நூற்றாண்டு விழாவை பல்வேறு துறைகளின் சார்பில் கொண்டாட 12 குழுக்கள் ஏற்படுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி எழுத்தாளர் குழுவின் சார்பில், தமிழ்நாட்டுக்கும், தமிழுக்கும் கலைஞர் ஆற்றிய அரும்பணிகளை பொதுமக்கள், மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், முத்தமிழ் தேர் கலைஞரின் பேனா வடிவிலான அலங்கார ஊர்தி வடிவமைக்கப்பட்டு அதில், கலைஞரின் இல்லத்தில் கலைஞர் அமர்ந்திருப்பதை போன்ற தத்ரூபமான சிலையும் நிறுவப்பட்டுள்ளது. இந்நிலையில், முத்தமிழ் தேர் கடந்த 4ம்தேதி கன்னியாகுமரியில் இருந்து பயணத்தை தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு மாவட்டங்கள் வழியாக கடந்து சென்ற முத்தமிழ் தேரை லட்சக்கணக்கானோர் பார்வையிட்டனர்.

இதன்தொடர்ச்சியாக திருவண்ணாமலை வந்த முத்தமிழ் தேர் ஊர்தி நேற்று வேலூர் மாவட்டத்துக்கு வந்தது. மதியம் 1.30 மணியளவில் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. வேலூர் கோட்டை காந்தி சிலை அருகே வந்தடைந்த ஊர்திக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமையில் மலர் தூவி வரவேற்பளித்தனர். அந்த ஊர்தியில் உள்ள கலைஞர் சிலைக்கு எம்எல்ஏக்கள் ஏ.பி.நந்தகுமார், கார்த்திகேயன், அமலு, எஸ்பி மணிவண்ணன், மேயர் சுஜாதா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு.பாபு, துணைமேயர் சுனில்குமார், கமிஷனர் ஜானகி, டிஆர்ஓ மாலதி, திட்ட இயக்குனர் ஆர்த்தி, மாவட்ட வன அலுவலர் கலாநிதி, அவைத்தலைவர் முகமதுசகி, மண்டல குழு தலைவர் நரேந்திரன், ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

இதுதவிர அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர். மாணவ, மாணவிகள் பலர் ஆர்வமுடன் செல்போனில் செல்பி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். தொடர்ந்து வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள கிரீன் சர்க்கிள் பகுதியில் பொதுமக்களின் பார்வைக்கு நிறுத்தப்பட்டது. இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று பார்வையிட்டனர். மாலை 3.30 மணியளவில் காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தம் பகுதிக்கு வந்த ஊர்திக்கு எம்பி கதிர்ஆனந்த் தலைமையில் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஊர்தியில் வடிவமைக்கப்பட்டு இருந்த கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் சுனில்குமார், மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன், பகுதி செயலாளர் வன்னியராஜா, ஒன்றிய செயலாளர்கள் சரவணன், தணிக்காச்சலம் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இரவு 7 மணி வரை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினர் ஏராளமானோர் பார்வையிட்டனர். பார்வையிட வந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மண்டல குழு தலைவர் புஷ்பலதா பேனா வழங்கினார். இதையடுத்து ஊர்தி இரவு கலெக்டர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. இன்று காலை விழுப்புரம் மாவட்டத்துக்கு புறப்பட்டு செல்கிறது.

The post முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி வேலூர், காட்பாடிக்கு வருகை கலெக்டர், எம்பி, எம்எல்ஏக்கள் வரவேற்பு கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி appeared first on Dinakaran.

Related Stories: