தங்க செயின் பறித்ததில் மொபட்டில் இருந்து விழுந்த பெண் விஏஓ படுகாயம் திருப்பத்தூரை சேர்ந்தவர் பள்ளிகொண்டா அருகே பைக் ஆசாமிகள் அட்டூழியம்

பள்ளிகொண்டா, டிச.2: பள்ளிகொண்டா அருகே பைக் ஆசாமிகள் தங்க செயின் பறித்ததில் திருப்பத்தூரை சேர்ந்த பெண் விஏஓ மொபட்டில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார். திருப்பத்தூர் மாவட்டம், புதூர் மாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்தவர் காஞ்சனா(33). இவர், வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த அனங்காநல்லூரில் விஏஓவாக பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கம்போல் நேற்று திருப்பத்தூரில் இருந்து அனங்காநல்லூரில் உள்ள அலுவலகத்துக்கு மொபட்டில் சென்றார். இந்நிலையில் வேலூர் மாவட்டம் கூத்தம்பாக்கம் சர்வீஸ் சாலையில் சென்றபோது, பின்னால் பைக்கில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த 2 மர்ம நபர்கள், காஞ்சனா கழுத்தில் இருந்த 1.5 சவரன் தங்க செயினை பறித்துள்ளனர். இதில் காஞ்சனா மொபட்டில் இருந்து கீழே விழுந்து தலையில் படுகாயமடைந்தார். மேலும் அவர் அணிந்திருந்த செயின் பாதியாக அறுந்து, செயின் பறித்த ஆசாமியின் கையில் சிக்கியது. அதை எடுத்துக்கொண்டு பைக் ஆசாமிகள் தப்பி சென்றனர். அவ்வழியாக சென்றவர்கள் மடக்கி பிடிக்க முயன்றும் முடியவில்லை. இதையடுத்து படுகாயமடைந்த காஞ்சனாவை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தகவலறிந்து வந்த பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிந்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர. மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்ய தொடங்கி உள்ளனர். பட்டப்பகலில் பைக் ஆசாமிகள் செயின் பறித்ததில் பெண் விஏஓ மொபட்டில் இருந்து விழுந்து படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post தங்க செயின் பறித்ததில் மொபட்டில் இருந்து விழுந்த பெண் விஏஓ படுகாயம் திருப்பத்தூரை சேர்ந்தவர் பள்ளிகொண்டா அருகே பைக் ஆசாமிகள் அட்டூழியம் appeared first on Dinakaran.

Related Stories: