பெங்களூருவில் 48 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு: இமெயிலில் அனுப்பியது யார்? போலீஸ் தீவிர விசாரணை

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள 48 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பெங்களூருவில் 48 தனியார் பள்ளிகளுக்கு ஒரே நேரத்தில் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. ஒரு தீவிரவாத அமைப்பின் பெயரில் இந்த மெயில் அனுப்பப்பட்டிருந்தது. இதனால் நேற்று காலை பெங்களூரு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து குழந்தைகளின் பெற்றோர் பள்ளிகள் முன்பு கூடினர். பள்ளி நிர்வாகம் உடனடியாக மாணவர்களை பள்ளியில் இருந்து வெளியேற்றி பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

தகவலறிந்து சென்ற போலீசார் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுடன் அனைத்து பள்ளிகளுக்கும் சென்று தீவிர சோதனை நடத்தினர். ஆனால் எங்குமே வெடிகுண்டு கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து இந்த இ-மெயில் வெறும் வதந்தி என்று தெரியவந்தது. இது குறித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தா கூறியதாவது, ‘48 பள்ளிகளுக்கு ஒரே நேரத்தில் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த முகவரியை வைத்து சைபர் கிரைம் போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர். சோதனையில் வெடிகுண்டோ அல்லது வெடி பொருட்களோ எங்குமே கிடைக்கவில்லை. இது வெறும் புரளிதான். இதே போன்று கடந்த ஆண்டும் வெடிகுண்டு புரளி ஏற்பட்டது.
விஷமிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்’ என்றார். துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் வெடிகுண்டு மிரட்டல் வந்த ஒரு பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

முதல்வர் சித்தராமையா கூறுகையில், ‘வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விஷமிகளை உடனடியாக கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். பள்ளிகளுக்கும், கோயில், வழிபாட்டுதலங்களுக்கும் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டுள்ளேன்’ என்றார்.

The post பெங்களூருவில் 48 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு: இமெயிலில் அனுப்பியது யார்? போலீஸ் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: