ஏழை சிறுமிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்திய கிராம மக்கள் சீர்வரிசை பொருட்கள் வழங்கி வாழ்த்தி நெகிழ்ச்சி ெசய்யாறு அருகே சர்க்கஸ் நடத்த வந்தபோது பூப்பெய்தினார்

செய்யாறு, டிச.1: செய்யாறு அருகே சர்க்கஸ் நிகழ்ச்சி நடத்த வந்தபோது பூப்பெய்திய ஏழை சிறுமிக்கு கிராம மக்கள் ஒன்று திரண்டு மஞ்சள் நீராட்டு விழா நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், உத்திரமேரூர் தாலுகா, மதுராந்தகம் கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம். இவர் `ராசாத்தி சர்க்கஸ்’ என்ற பெயரில் கிராமம், கிராமமாக சென்று கடந்த 40 ஆண்டுகளாக சர்க்கஸ் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவருடன் மனைவி சுலோச்சனா, மகன், 2 மகள்கள் மற்றும் உறவினர்கள் என 10 பேர் சர்க்கஸ் தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். அதன்படி, ரத்தினம் குழுவினர் கடந்த 23ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் தாலுகா, மோரணம் கிராமத்தில் சர்க்கஸ் நிகழ்ச்சியை நடத்த வந்தனர்.

பின்னர், அங்குள்ள பஜனை கோவில் தெருவில் டெண்ட் அமைத்து கடந்த 4 நாட்களாக மாலை நேரத்தில் சர்க்கஸ் சாகசங்கள் செய்து வந்தனர். இவர்களது சாகச நிகழ்ச்சியை சிறுவர், சிறுமிகள் மற்றும் கிராம மக்கள் அனைவரும் ஆர்வமுடன் பார்வையிட்டு வந்தனர். இந்நிலையில், ரத்தினத்தின் இளைய மகள் ராசாத்தி(15) என்பவர் நேற்று முன்தினம் பூப்பெய்தினார். இந்த தகவலறிந்த அப்பகுதி மக்கள், ஏழ்மையான நிலையில் சர்க்கஸ் செய்து மக்களை சந்தோஷப்படுத்தி வரும் ரத்தினம் குடும்பத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் ஆலோசனை செய்தனர். பின்னர், பூப்பெய்திய சிறுமி ராசாத்திக்கு கிராம மக்கள் சார்பில் மஞ்சள் நீராட்டு நடத்துவது என முடிவு செய்தனர். சிறுமிக்கு புதிய சேலைகள், மாலை, கண்ணாடி, வளையல்கள், பொட்டு வகைகள், மை, பவுடர், பழங்கள், அரிசி, மளிகை பொருட்கள் என 50 வகையான சீர்வரிசை பொருட்களை கிராம மக்கள் பங்களிப்பு ₹10 ஆயிரத்தில் வாங்கினர்.

தொடர்ந்து, நேற்று மாலை 5 மணியளவில் மோரணம் கிராமத்தை சேர்ந்த பெரியவர்கள், பெண்கள், இளைஞர்கள் மேளவாத்தியங்களுடன் ஊர்வலமாக சென்று, சர்க்கஸ் கூடாரத்தில் அமர்ந்திருந்த சிறுமி ராசாத்திக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினர். மேலும், சிறுமியை மஞ்சள் நீராட்டி நாற்காலியில் அமர வைத்து அவரது மாமா ராம்ராஜ் மாலை அணிவித்து வாழ்த்தினார். தொடர்ந்து, கிராம மக்கள் அனைவரும் சிறுமிக்கு சந்தன நலங்கு மற்றும் குங்குமம் வைத்து, பன்னீர் தெளித்து வாழ்த்தினர். இதை கண்ட சிறுமி ராசாத்தி, தந்தை ரத்தினம், தாயார் சுலோச்சனா மற்றும் உறவினர்கள் நெகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். பிழைப்பு தேடி வந்த தங்களுக்கு கிராம மக்களே திரண்டு வந்து சீர் செய்ததற்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியாமல் ஆனந்த கண்ணீர் வடித்தனர். சீர்வரிசை பொருட்களை பெற்றுக்கொண்ட ரத்தினம் குடும்பத்தினர் கிராம மக்களுக்கு நன்றி தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சர்க்கஸ் நிகழ்ச்சி நடத்த வந்த சிறுமிக்கு கிராம மக்களே திரண்டு மஞ்சள் நீராட்டு விழா நடத்திய சம்பவம் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பாக பேசப்பட்டதுடன் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

The post ஏழை சிறுமிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்திய கிராம மக்கள் சீர்வரிசை பொருட்கள் வழங்கி வாழ்த்தி நெகிழ்ச்சி ெசய்யாறு அருகே சர்க்கஸ் நடத்த வந்தபோது பூப்பெய்தினார் appeared first on Dinakaran.

Related Stories: