வடசென்னையில் மழையால் பாதித்த பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணி: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

சென்னை: வடசென்னை பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெறும் மீட்பு பணிகளை அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வடசென்னையில் மண்டலம் 3, 4, 5 மற்றும் 6 ஆகிய பகுதிகளில் ரூ.2,450 கோடி செலவில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

வடசென்னையில் முக்கிய கால்வாய்களான கேப்டன் காட்டன் கால்வாய், கொடுங்கையூர் கால்வாய், கொடுங்கையூர் இணைப்பு கால்வாய், ஓட்டேரி நல்லா, கூவம் போன்றவற்றில் உள்ள ஆகாயத்தாமரைகளை நீர்வளத்துறை மூலமாக அகற்றியதால், 60 ஆண்டு காலமாக பிரகாசம் சாலை, என்.எஸ்.சி போஸ் சாலை, வால்டாக்ஸ் சாலை, பேப்பர் மில்ஸ் ரோடு போன்ற பல சாலைகளில் இன்றைக்கு 15 சென்டிமீட்டர் மழை பெய்தும் கூட ஒரு சிறு அளவு கூட தண்ணீர் தேங்கவில்லை.

தாழ்வான பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் அரசுத்துறை அலுவலர்கள் ஒருபுறம் பணியாற்றினாலும், மக்கள் பிரதிநிதிகளான அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஒருபுறமும், திமுக நிர்வாகிகள் மறுபுறமும் போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். எப்படிப்பட்ட பெருமழை வந்தாலும் சமாளிப்பதற்கு சென்னை மாநகராட்சி தயாராக இருக்கின்றது.

நேற்று முன்தினம் முதல்வர் இரவு முழுவதும் உறங்காமல் அவருக்கு வருகின்ற செய்திகள், தண்ணீர் தேங்கி நிற்கின்ற பகுதிகள் என்று குறிப்பிடும் இடங்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், என்னையும், மேயரையும் சென்று பார்வையிடச் சொல்லி இயக்கிக் கொண்டே இருந்தார். நேற்று முன்தினம் இரவு யாருமே தூங்காமல் பணி செய்துள்ளனர்.

முதல்வர் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி சென்னை மாநகராட்சி பகுதியில் மழை பாதிப்புகளை பார்வையிட வருகை தந்தபோது இடுப்பு அளவிற்கு தண்ணீர் நின்ற பகுதிகளில் கூட நேற்றைக்கு பெய்த கன மழையில் ஒரு சொட்டு தண்ணீர் கூட நிற்கவில்லை. இந்த மாற்றத்திற்கு காரணம் முதல்வரின் செயல்பாடுகள் தான். ஆகவே சென்னை மாநகர மக்களை காப்பதில் நமது முதலமைச்சர் அதிக அக்கறையோடு செயல்படுகிறார். நாங்களும், அரசு அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து மழைப் பாதிப்பிலிருந்து மக்களை முழுவதுமாக பாதுகாப்போம். இவ்வாறு கூறினார்.

The post வடசென்னையில் மழையால் பாதித்த பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணி: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: