தாம்பரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பல்லாவரம் எம்எல்ஏ ஆய்வு

தாம்பரம்: தாம்பரம் பகுதியில் மழை பாதிப்புகளை பல்லாவரம் எம்எல்ஏ அதிகாரிகளுடன் ஆய்வு நடவடிக்கை மேற்கொண்டார். தாம்பரம், சிட்லப்பாக்கம், குரோம்பேட்டை, பல்லாவரம், செம்பாக்கம், சேலையூர், பெருங்களத்தூர், முடிச்சூர் மற்றும் சுற்றுவட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலை, காலிமனைகள், பள்ளமான இடம், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். தேங்கி நிற்கும் மழைநீரை உடனுக்குடன் வெளியேற்றும் பணியில் தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் இரவும், பகலமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் சரி செய்யவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார். அதன்படி இன்று காலை பல்லாவரம் தொகுதிக்கு உட்பட்ட கீழ்க்கட்டளை பெரியதெரு, பாலாஜிநகர், காந்தி தெரு, பிருந்தாவன் நகர் மற்றும் சுற்றுவட்ட பகுதிகளில் பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, மண்டலக்குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை ஆகியோர் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்யும் பணிகளை வேகப்படுத்தினர்.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், எந்த நேரத்திலும் அதிகாரிகள், ஊழியர்கள் தயார் நிலையில் இருக்கவேண்டும் எனவும் ஆலோசனை வழங்கினர். மேலும் மழை பாதிப்பு குறித்து புகார் வந்ததும் உடனுக்குடன் சரி செய்வதற்கான பணியில் அதிகாரிகள் ஈடுபடவேண்டும். மழை பாதிப்பு குறித்த புகார்களை பொதுமக்கள் எந்த நேரத்திலும் தன்னிடம் தெரிவிக்கலாம் என எம்எல்ஏ இ.கருணாநிதி கூறியுள்ளார்.

The post தாம்பரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பல்லாவரம் எம்எல்ஏ ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: