சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை: சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்றுக்கு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.

சுரங்க பாதைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சில பகுதிகளில் வீடுகளிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் மழை தொடர்பான கட்டணமில்லா புகார் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். மழை நீர் அகற்றம் தொடர்பாக சென்னை முழுவதும் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து மாநகராட்சி மேயர், ஆணையர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கனமழை பாதிப்புகளை எதிர்கொள்ளும் நடவடிக்கை, மழை நீர் அகற்றும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிகிறார்.

The post சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: